ஹிந்திப் படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் : ஆச்சரியத்தில் கட்சிக்காரர்கள்

திமுக ஆட்சி அமைத்த பின்பு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனம் தமிழ்த் திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கேற்றாற் போல கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு ஒரு படத்தையாவது அந்நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங்கை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. அது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஹிந்திக்கு எதிராக தீவிரமாக செயல்படும் கட்சி என தன்னை சொல்லிக் கொள்ளும் கட்சியின் முக்கிய வாரிசு இப்படி ஒரு ஹிந்திப் படத்தை வெளியிடலாமா என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக சொந்த கட்சிக்காரர்களே இது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'லால் சிங் சத்தா' படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படமும் வெளியாகிறது. அப்படத்தின் தமிழக உரிமையையும் உதயநிதியின் நிறுவனம் தான் வாங்கியுள்ளது. ஒரு தமிழ்ப் படத்திற்குப் போட்டியாக அவர்களே ஒரு ஹிந்திப் படத்தையும் வெளியிடுவது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு படங்கள் மட்டுமே அன்றைய தினம் தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் என்கிறார்கள்.

இதனால் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விஷாலின் 'லத்தி' படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.