இலங்கை புதிய அதிபராக டல்லாஸ் அழகப்பெரும தேர்வாக வாய்ப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையின் புதிய அதிபராக டல்லாஸ் அழகப்பெரும, 63, மற்றும் பிரதமராக சஜித் பிரேமதாசா, 55, ஆகியோரை தேர்வு செய்ய, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் தப்பி சென்ற பின், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல், அந்நாட்டு பார்லி.,யில் இன்று நடக்கிறது. உறுப்பினர்கள் ஓட்டு போட்டு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, பார்லி.,யில் ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இன்று நடக்க உள்ளது. இதற்கு முன்வரை, பிரதமரை மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த பின், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பார்லி.,யில் ஒருமனதாக தேர்ந்தெடுத்து வந்தனர்.
புதிய அதிபருக்கான தேர்தலில், தற்போதைய தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 73, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி குழுவின் முக்கிய தலைவரான டல்லாஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி கட்சியான, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியை சேர்ந்த அனுரா குமார திசநாயகே, 53, ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், டல்லாஸ் அழகபெருமவை புதிய அதிபராகவும், பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பாலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராகவும் தேர்வு செய்ய, பெரும்பாலான ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சி தலைவர் ஜி.எல்.பெய்ரிஸ் தெரிவித்தார். புதிதாக தேர்வாகும் அதிபர், 2024 நவம்பர் வரை பதவியில் தொடர்வார்.

இந்திய அதிகாரி மீது தாக்குதல்!

இலங்கைக்கான இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் உள்ள இந்திய துாதரகத்தின்,’விசா’ பிரிவின் இயக்குனரும், இந்தியருமான விவேக் வர்மா, கொழும்புவில் நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இலங்கையில் வசிக்கும் இந்தியர்கள் இங்குள்ள நிலைமை குறித்து தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப வெளியே செல்வதை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘4,000 புத்தகங்களை இழந்தேன்!’

இலங்கையின் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தபோது, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதில் வீட்டின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், ”பல ஆண்டுகளாக நான் சேகரித்து வந்த, 4,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தீயில் கருகின. இதில் சில புத்தகங்கள் நுாறாண்டுகளை கடந்தது. மேலும், 125 ஆண்டுகள் பழமையான, ‘பியானோ’ இசைக்கருவி வைத்திருந்தேன். அதுவும் தீயில் கருகியது,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.