அரசியல் நெருக்கடி நிலவும் சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதிய அதிபர் தேர்வு

கொழும்பு: நெருக்கடி நிலையை சந்தித்துள்ள இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபரை தேர்வு செய்யவுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்திருந்த முக்கிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

நாட்டு நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும், தனது ஆதரவை, போட்டி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமவுக்கு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர், இந்த தேர்தலில் பங்கெடுத்து ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபரை தேர்வு செய்யவுள்ளனர். 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெரும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டல்லஸ் அழகப்பெரும ஆகியோர் இந்த போட்டியில் உள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டம்

இதனிடையே, இலங்கை நிலவரம் குறித்து டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், “இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே பொருட்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், கடைசியாக ரூ.80 கோடி மதிப்புள்ள அரிசி, பால்பவுடர், மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். இலங்கையில் இருந்து இதுவரை 43 குடும்பங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. அவர்களுக்குத் தலா ரூ.1500 மதிப்பில் பாத்திரங்கள் உள்ளிட்ட 16 பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன” என பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.