ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட உய்யக் கொண்டான் வாய்க்கால்: பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த உய்யக்கொண்டான்  கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான உய்யக்கொண்டான் எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர்.

அப்படி வரலாற்று சிறப்புமிக்க திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தண்ணீர் அமைப்பைச் சேர்ந்த கே சி நீலமேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,பேட்டைவாய்த்தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய்.

சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.உழவுக்கு  உயிராய் ஓடிக்கொண்டிருந்த உய்யக்கொண்டான்  வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சமூக ஆர்வலர்கள் பலவாறு  வலியுறுத்தப்பட்டாலும், கழிவு நீர் கலப்பது பெரும்பாலான இடங்களில் தொடர்கிறது.பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் கலப்பதால் உய்யக்கொண்டான் வாய்க்கால் நீரின் தன்மை முற்றிலுமாக மாறி கழிவு நீர் வாய்க்காலாகவே மாறிப் போனது.

மாநகரப் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வீடுகள், மருத்துவமனைகள், உணவகங்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால்கள்  ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக இந்த வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் வாய்க்கால் முற்றிலுமாக மாசுபட்டுள்ளது.

கழிவு நீர் அதிகளவில் சென்று குழுமாயி அம்மன் கோயில் அருகேயுள்ள தொட்டிப்பாலம் வழியாக குடமுருட்டியிலும் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உய்யக்கொண்டான் தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. அடுத்துடன் தண்ணீர் மாசு அடைவதுடன், கொசு உற்பத்தி மையமாகவும் மாறியிருக்கிறது.தற்போது நீர் வரத்துக் காலம் என்பதால் பல இடங்களில் கழிவு நீர் கலந்து வருகிறது. நீரோட்டம் இல்லாத நிலையில் கழிவு நீரின் புகலிடமாக உய்யக் கொண்டான் வாய்க்கால் மாறிவிடும்.

உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு மூலம், உய்யக்கொண்டான் வாய்க்காலைச் சீரமைக்க, குறிப்பாக அதில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் கடந்த 2014-வது ஆண்டில், உய்யக் கொண்டான்பாதுகாப்புக்குழுஅமைக் கப்பட்டது.

இதற்கு மாவட்டஆட்சியர் தலைவராகவும், மாநகர ஆணையர், மற்றும் நீராதாரத் துறை ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டப் பொறியாளர்கள், மாநகராட்சியினர், மருத்துவமனை குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வ அமைப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

குழு தொடங்கிய வேகத்தில் கரையில் கான்கிரீட் சுவர்கள் அமைப்பது உள்பட சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அடுத்தடுத்து வந்த ஆட்சியர்கள் இக்குழுவை கண்டு கொள்ளவில்லை.உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழுவில்  தண்ணீர் அமைப்பு,உய்யகொண்டான் வாய்க்காலை மீட்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புக் குழுவில் அங்கம் வைத்திருந்தது.

பின்னர் வந்த மாவட்ட ஆட்சியர்கள் பல ஆண்டுகளாக அக்குழு செயல் படவில்லை. வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாலும், கோடைகாலங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும் வாய்க்கால்துர்நாற்றம் வீசுவதோடு தண்ணீர் மாசு அடைவதுடன் , கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு தொற்றும், நிலத்தடி நீரும் நச்சுத்தன்மையடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மீண்டும் உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழுவை கூட்ட  வேண்டும் என வும், மேலும் உய்யக் கொண்டான் வாய்க்காலை ஒட்டி உள்ள வீடுகளில் இருந்து குழாய்கள் மூலம் நேரடியாகவும் மற்றும்  கழிவுநீர் திறந்து விடுவதைத் தடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்ணீர் அமைப்பு, மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.