அரசு ஊழியர்களை விமர்சித்தால் தண்டனை: தலிபான் அதிரடி உத்தரவு!

ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். ஆனால், அவர்களது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் அந்நாடுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன. மேலும், ஆட்சி அமைத்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பெண்களுக்கான உரிமைகள் மறுப்பு, ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது என்பன போன்ற பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு முன்னர் தலிபான்கள் பேசியதற்கும், தற்போதைய அவர்களது நடவடிக்கைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக, தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் பள்ளிகளுக்கு செல்லவும், கல்லூரிகளுக்கு செல்லவும், தனியாக வெளியே செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பொது வெளியில் உடலை முழுமையாக மறைக்கும் விதமான புர்காவை அணிவதும், பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தானிய சுத்திகரிப்பு தளத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்!

இந்த நிலையில், ஆப்கன் அரசின் அறிஞர்கள், அரசு ஊழியர்களை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற விமர்சனங்கள் அரசுக்கு எதிரான பிரசாரம் என்பது மட்டுமின்றி எதிரிகளுக்கு உதவும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ராணுவ பணியில் உள்ள வீரர்களைத் தொடுவது அல்லது அவர்களது உடைகளை விலக்குவது மற்றும் அவர்களிடத்தில் தவறாக பேசுவதும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அரசை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த புதிய உத்தரவை தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக அரசு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.