உக்ரைனில் துறைமுக தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என ரஷியா அறிவிப்பு; துருக்கி தகவல்

இஸ்தான்புல்,

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள போரானது இன்றுடன் 5 மாதங்களை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ந்தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடங்கப்பட்டது.

ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் கேட்டு கொண்டும் ரஷிய படைகள் பின்வாங்கவில்லை. இது நீண்டகால போராக இருக்க கூடும் என அமெரிக்கா பின்னர் தெரிவித்தது. எனினும், உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள், தளவாடங்களை அமெரிக்கா அளித்து வருகிறது.

இதனால், இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து உள்ளன. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் கடுமையான தாக்குதல்களை தொடுத்தன.

இந்த சூழலில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகள் முன்னிலையில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாட்டு மந்திரிகளும் கையெழுத்திட்டனர்.

இதன்படி, உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதி மீண்டும் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், சில மணி நேரத்துக்குள்ளாக ரஷிய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தின என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஒப்பந்தத்திற்கு எதிராக கருங்கடல் துறைமுகத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷியா ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ரஷியாவின் இந்த தாக்குதல் ஒன்றை மட்டும் நிரூபிக்கிறது.. ரஷியா என்ன சொன்னாலும், வாக்குறுதி வழங்கினாலும், அதனை செயல்படுத்தாமல் இருப்பதற்கான வழிகளை இது காட்டுகிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துருக்கி பாதுகாப்பு மந்திரி ஹுலுசாய் அகார் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ரஷியாவுடன் நாங்கள் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தனர். இந்த விவகாரம் பற்றி விரிவாகவும் மற்றும் தீவிர விசாரணை செய்தும் வருகிறோம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

துறைமுகங்களை தானிய ஏற்றுமதிக்காக திறப்பது பற்றிய ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னர் தாக்குதல் நடந்துள்ளது என்பது உண்மையில் எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என அகார் தெரிவித்து உள்ளார்.

இந்த தாக்குதல் பற்றி ஒடேசா ராணுவ நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் செர்ஹை பிராட்சக் கூறும்போது, இரண்டு ஏவுகணைகள் துறைமுக உட்கட்டமைப்பு மீது மோதி தாக்குதல் ஏற்படுத்தின. 2 ஏவுகணைகள், உக்ரைனின் வான்வழி பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என கூறியுள்ளார். ஒடேசா பகுதியில் 6 குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டது என உக்ரைனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி கொன்சாரென்கோ கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.