நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென வணக்கத்திற்குரிய பெல்பொல விபஸ்சி நாயக்க தேரர் வலியுறுத்தல்…

நீண்டகால அரசியல் அனுபவமுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோட்டை விகாரை தரப்பின் பதிவாளர், ஜப்பானின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய பெல்பொல விபஸ்சி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் முறையை விட்டுவிட்டு, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஜனாதிபதி அவர்களின் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், தற்போதைய ஜனாதிபதி அவர்கள் அச்சமின்றி சவாலை ஏற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய தேரர், சகல சவால்களையும் வெற்றிகொள்ள அவரால் முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நேற்று (24) பிற்பகல் சேதவத்த, வெஹெரகொட புராதன விகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட வேளையில், அனுசாசனை உரை நிகழ்த்திய தேரர் அவர்கள்  இதனைக் குறிப்பிட்டார்.

விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், போதியை வழிபட்டு சமய கிரியைகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதி சங்கைக்குரிய அம்பன்வல ஞானாலோக தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், மகா சங்கத்தினரை சந்தித்து அவர்களின் சுக நலன்களை கேட்டறிந்தார்.

விகாரைக்கு வந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி அவர்கள் சிநேகபூர்வ உரையாடலையும் மேற்கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க விகாரையான சேதவத்த, வெஹரகொட புராதன விகாரை, திருமதி. ஹெலெனா விஜேவர்தன மற்றும் திரு. டொன் பிலிப் விஜேவர்தன அவர்கள் பௌத்த மதத்துக்கு வழங்கிய புண்ணிய பூமியாகும்.

புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நிறைவேற்று சபையின் தலைவர் அமரி மந்திகா விஜேவர்தன, செயலாளர் சன்ன விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

25.07.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.