மழைக்கால கூட்டத்தொடரில் அமளி… ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பி-க்கள் இடைநீக்கம்! – திமுக கண்டனம்

கடந்த 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே எதிர்க்கட்சிகள் அக்னிபத் திட்டம், எரிபொருள் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சிபிஐ, அமலாக்கப் பிரிவுகளை அரசு தவறாகப் பயன்படுத்திய விவகாரம், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட நாட்டின் 13 அடிப்படைப் பிரச்னைகள் குறித்துக் கேள்வி எழுப்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக எதிர்க்கட்சியினர் ஆளும் அரசுக்கு எதிராக முழக்கங்கள், அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிடுதல்… பதாகைகளை ஏந்தி முழக்கமிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை சிலமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டன.

ஜோதிமணி

அதைத் தொடர்ந்து, மதியம் 2 மணியளவில் மீண்டும் அவைகள் கூடியபோது மீண்டும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவைகள் செயல்பட விடாமல் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்ததாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த மழைக்கால கூட்டத்தொடரில் தடை செய்யப்பட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது.

எம்.பி – டி.ஆர். பாலு

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, “காங்கிரஸ் எம்.பி-க்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்திருப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. இன்று காங்கிரஸ் எம்.பி-க்கள் நாளை தி.மு.க. எம்.பி-க்கள் என ஒவ்வொரு கட்சியாக இடைநீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.