Parliament Monsoon Session: காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்…காரணம் இதுதான்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்கள்கிழமை ( ஜூலை 18) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே விலைவாசி உயர்வு, நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக பெரும்பாலான நாட்களில் அவை நடைபெறாமல் நாள்தோறும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 3 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் ஆகிய நான்கு காங்கிரஸ் எம்பிக்கள், மக்களவையின் மையப் பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் 1,053 ரூபாய் விற்றால், சாமானியர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? என்ற பொருள் படும்படியான ஆங்கில வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி அவர்கள் அவையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் அவரது பேச்சை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நான்கு பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து இந்த நான்கு எம்பிக்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் மக்களவை நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.