மாணவியிடம் அத்துமீறிய பெரியார் பல்கலைகழக பதிவாளருக்கு தர்ம அடி..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மாணவியை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்த பல்கலைக்கழக பதிவாளரை பிடித்து உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மாணவி தனியாக வந்திருப்பதாக நினைத்து தரம் தாழ்ந்த பதிவாளருக்கு விழுந்த தரமான அடிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் 45 வயதான டி.கோபி என்பவர் தான் மாணவியிடம் எல்லை மீறி தர்ம அடி வாங்கியவர்..!

 

இவர் கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராகப் பதவி வகித்து வருகிறார். இவரது துறையில் சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு கோபி நெறியாளராக உள்ளார்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேராசிரியர் டி.கோபி மாணவியை தொடர்பு கொண்டு, தான் தங்கி இருக்கும் பல்கலைக்கழக விடுதியில் ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பான விளக்கம் அளிப்பதாகவும், உடனே அங்கு வருமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து பேராசிரியர் அவசரமாக அழைப்பதாக கூறி மாணவி தனது உறவினர்களுடன் பதிவாளர் டி.கோபி தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றார். உறவினர்கள் விடுதிக்கு வெளியே காத்திருந்த நிலையில் மாணவி மட்டும் உள்ளே சென்று பதிவாளர் டி.கோபியை சந்தித்தார்.

அப்போது பதிவாளர் கோபி, மாணவி மட்டும் தனியாக வந்திருப்பதாக நினைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அழுது கொண்டே வெளியே ஓடி வந்த மாணவி, விடுதி அருகே காத்திருந்த தனது உறவினர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆவேசமாக உள்ளே புகுந்து பதிவாளர் கோபியை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த கோபிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி, கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் கோபி மீது புகார் அளித்தார்.

இதற்கு போட்டியாக அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக பதிவாளர் டி.கோபி, மாணவிக்கு எதிராக புகார் மனு கொடுத்துள்ளார். இதனிடையே ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களை சீண்டுதல் மற்றும் தொடர்ந்து தொல்லை தருதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பாலியல் பதிவாளர் டி.கோபி மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கோபிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.