அரக்கோணம்: அதிகாரிமீது தாக்குதல்; திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் என்பவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக ‘முரசொலி’யில் கட்டம் கட்டி செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருப்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, முரசொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லட்சுமிகாந்தன், அப்படியென்ன தி.மு.க-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார்? என்று விசாரித்தோம்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (பொது) பணியிலிருப்பவர் ப.ஜெயவேலு. கடந்த 18-ம் தேதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த டெண்டர் விடும் பணி தொடர்பாக, அன்று மாலை 4:30 மணிக்கு தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் அனுமதியின்றி உள்ளே நுழைந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கடுஞ்சொற்களால் வசைப்பாடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. ‘‘நாங்கள் சொல்பவர்களுக்குத்தான் டெண்டர் விட வேண்டும்’’ என்றும் அவர் மிரட்டிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட லட்சுமிகாந்தன்

இது தொடர்பாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேலு, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் லட்சுமிகாந்தன்மீது எழுத்துப்பூர்வமாக புகார் மனுவையும் கொடுத்திருக்கிறார். லட்சுமிகாந்தன், அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேலுவை போனில் மிரட்டுவதைப்போன்ற ஆடியோ உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில், ‘‘போன் பண்ணா எடுக்க மாட்டியா நீ… டெண்டர் வெச்சிட்டீங்களா! நான் சொல்றதைத்தான் நீ செய்யணும். ஒன்றியக் குழு சேர்மன் நிர்மலா தான். அவங்க புருஷன் சௌந்தர் கிடையாது. நான் சொல்றதைக் கேட்கலைனா, அடிதடி நடக்கும்’’ என்பதாக அந்த உரையாடல் முடிகிறது.

சேர்மன் கணவரான சௌந்தர் அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக இருக்கிறார். மேற்கு ஒன்றியச் செயலாளர் சௌந்தரும், கிழக்கு ஒன்றியச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனும் பகைவர்களைப்போலவே பொது இடங்களில் முறைப்பது, நடப்பது, உரசுவது என அதிரி புதிரியாக எதிர்ப்பை காட்டிக் கொள்கிறார்களாம். தி.மு.க-வில் மேற்கு ஒன்றியத்துக்கும், கிழக்கு ஒன்றியத்துக்கும் இடையேயான உட்கட்சி மோதலில்தான் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பந்தாடியிருக்கிறார்கள்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ப.ஜெயவேலு

இந்த விவகாரம் அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, ராணிப்பேட்டை மாவட்டத்திலிருக்கும் 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிகளைப் புறக்கணித்து, பணி பாதுகாப்புக் கோரி ஆளுங்கட்சியினருக்கு எதிராக அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த விவகாரம் அரசியலாகவும் மாறியது. எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, பா.ம.க கட்சிகளும் களத்திலிறங்கி, ‘‘அதிகாரியை தாக்கிய தி.மு.க பிரமுகர் லட்சுமிகாந்தனையும், அவரைத் தூண்டிவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனையும் கைதுசெய்ய வேண்டும்’’ என முழக்கமிட்டனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும், கைத்தறித்துறை அமைச்சருமான காந்தியின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலாளர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆகிய இருதரப்பையும் அழைத்து விசாரித்த அமைச்சர் காந்தி, ‘‘அதிகாரிகளிடம் வம்பு செய்தால் தலைமையிடத்தில் சொல்லி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியிலிருக்க மாட்டீர்கள்’’ என எச்சரித்து அனுப்பினாராம்.

இந்தச் சூழலில்தான் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினர் லட்சுமிகாந்தனை, தலைமை தற்காலிகமாக நீக்கியிருக்கிறது என தி.மு.க நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

இந்த பிரச்னைக்கெல்லாம் ‘முதல்’ காரணமாக சொல்லப்படும் கிழக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தமிழ்ச்செல்வனிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், ‘‘சத்தியமாக, ஆடியோவில் நான் பேசவில்லை. வேறு யாரையோ பேச வைத்து என்னை சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில், நானே நேரில் சென்று வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டேன்’’ என்றார்.

அமைச்சர் காந்தி

மேற்கு ஒன்றியச் செயலாளரும் சேர்மனின் கணவருமான சௌந்தரிடம் கேட்டபோது, ‘‘இந்த விவகாரத்தில் அமைச்சர் இருதரப்பையும் அழைத்து கண்டித்துவிட்டார். ஆளுங்கட்சி விவகாரம் என்பதால் செய்தி வெளியிட வேண்டாம். கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும்’’ என்றார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியவரும் கட்சியிலிருந்து தற்சமயம் நீக்கப்பட்டவருமான லட்சுமிகாந்தனிடம் விளக்கம் கேட்பதற்காக போனில் தொடர்பு கொண்டோம். போனை எடுத்த யாரோ ஒருவர், ‘அண்ணன் வெளியில் சென்றிருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

தாக்குதலுக்கு ஆளான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேலுவிடம் பேசினோம். ‘‘அரசியல் இடையூறுகள் தொடர்ந்து இருக்கின்றன. எனக்கு மட்டுமின்றி, அனைத்து அலுவலர்களுக்கும் இதுமாதிரி பிரச்னைகள் கொடுக்கப்படுகின்றன. என்னை தாக்கிய தி.மு.க பிரமுகர்மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார் வருத்தத்தோடு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.