எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு கட்டாயம் விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த டெண்டர் முறைகேடு வழக்கு கட்டாயம் வரும் 3ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம்,யாரும் ஒத்திவைக்க கோரிக்கை வைக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் வழக்கை சிபிஐக்கு மாற்றியமைக்க வேண்டும் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் இதுதொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலும் முன்னதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறைதான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட சுமார் ரூ.4ஆயிரத்து 800 கோடி மதிப்பு அளவிற்கு ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டிருயிருந்தார். இருப்பினும் லஞ்ச ஒழிப்புத்துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு என்பதால், மேற்கண்ட முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த விசாரணையும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் திமுக தரப்பில் கேவியட் மனுவும், அதேப்போன்று  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும், எடப்பாடி பழனிசாமியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கானது கடந்த 2018ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை வித்தது.இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கிருஷ்ணா முராரி மற்றும் ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘‘இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தது எங்களுக்கு தெரியாது. அதனால் நாங்கள் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, இந்த வழக்கில் முன்னதாக வக்காலத்து தாக்கல் செய்திருந்தவர் தற்போது அரசு தரப்பு வழக்கறிஞராக இருப்பதால், அவரால் இதனை தொடர முடியாது. அதனால் வேறு ஒரு வழக்கறிஞரை வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.தலைமை நீதிபதி உத்தரவில்,‘‘ இதில் மூன்று வார அவகாசம் என்பது அதிகப்படியானது. அதனால் வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் வக்காலத்து தொடர்பான விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் முறைகேடு தொடர்பான வழக்கு கட்டாயம் விசாரிக்கப்படும் என்பதால், யாரும் ஒத்திவைக்க வேண்டு என்ற கோரிக்கையை எழுப்பக் கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.