கூகுளில் 39 முறை விண்ணப்பித்து 40-வது முயற்சியில் வேலை: இது ஓர் இளைஞரின் விடாமுயற்சி வைரல் கதை

தன் கனவு நிறுவனத்தில் ஒரு வேலை. அதற்காக விடாமுயற்சியைக் கைவிடாமல் ஓர் இளைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டைலர் கோஹன். இவர் டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜி அண்ட் ஆபரேஷன் பிரிவில் இணை மேலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், அவரின் இலக்கு எல்லாம் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது.

ஆகையால் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார். கடைசியாக அவர் கனவு நினைவாகிவிட்டது. கடந்த ஜூலை 19 ஆம் தேதி அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. இது குறித்து டைலர் கோஹன் தனது சமூகவலைதள பக்கத்தில், “விடாமுயற்சிக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. அது என்னவென்பதை அறிய நான் இன்னமும் முற்பட்டுக் கொண்டிருக்கிறேன். 39 நிராகரிப்புகள், 1 ஏற்பு” என்று பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவுடன் கூகுளுக்கு தான் அனுப்பிய விண்ணப்பங்கள் அங்கிருந்து பெறப்பட்ட பதில்கள் என்று அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட்களாக எடுத்து பதிவேற்றியுள்ளார். முதன்முதலாக ஆக்ஸ்ட் 25, 2019-ல் தான் டைலர் கூகுள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவர் சற்றும் மனம் தளரவில்லை. ஜூலை 19, 2022 அன்று அவர் கூகுளில் வேலை வேண்டி அனுப்பிய விண்ணப்பம் 39-வது விண்ணப்பம்.

டைலர் கோஹனின் பதிவை சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்றுள்ளனர். சிலர் தங்கள் வாழ்வில் பிடித்த வேலைக்காக தாங்கள் மேற்கொண்ட கடும் முயற்சியைப் பற்றிய கதைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் “நான் அமேசானில் வேலைக்கு சேர 120-க்கும் மேற்பட்ட முறை விண்ணப்பித்து அதன் பின்னர் அங்கு வேலையில் சேர்ந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.