’கேட்கக்கூடாத கேள்விகளை இதோ 'ராஜா'விடம் கேட்கிறேன்’ – ராகுல் காந்தி எழுப்பிய 10 கேள்விகள்!

நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசுக்கு ராகுல் காந்தி 10 கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.
File image of Rahul Gandhi
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் பிரதமர் மோடியை ‘ராஜா’ என்று குறிப்பிட்டு, “மழைக்கால கூட்டத்தொடரில், பிரதமருடன் மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க விரும்பினோம். பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பிரதமரும் அவரது அரசாங்கமும் பதிலளிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவரது சர்வாதிகாரத்தைப் பாருங்கள். பிரதமர் கேள்வி கேட்டதற்கு கோபமடைந்தார், 57 எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர், 23 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சரி, கேட்கக்கூடாத கேள்விகளை இதோ ‘ராஜா’விடம் கேட்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் கேட்கும் பத்து கேள்விகள் இதோ!
1. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வேலையின்மை ஏற்பட்டுள்ளது ஏன்? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
2. தயிர், தானியங்கள் போன்ற அன்றாட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை விதித்து மக்களிடம் இருந்து அவர்களது உணவை ஏன் பிடுங்குகிறீர்கள்?
3. சமையல் எண்ணெய், பெட்ரோல்-டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலை விண்ணைத் தொடுகிறது. இதிலிருந்து பொதுமக்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்?
4. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80ஐ தாண்டியது ஏன்?
5. 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு ஆள்சேர்ப்பு கூட செய்யாமல், தற்போது ‘அக்னிபத்’ திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. 4 வருட ஒப்பந்தத்தில் இளைஞர்கள் ‘அக்னிவீரன்’ ஆக வேண்டிய கட்டாயம் ஏன்?
6. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் நமது எல்லைக்குள் நுழைந்துள்ளது. இன்னமும் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?
7. பயிர் காப்பீட்டினால் மட்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.40,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஆனால் 2022க்குள் ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்ற வாக்குறுதியில் இன்னும் மவுனம் காப்பது ஏன்?
8. சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP) என்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது? மேலும் விவசாயிகள் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு என்ன ஆனது?
9. மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளில் 50% சலுகை ஏன் நிறுத்தப்பட்டது? முதியோர்களுக்கு சலுகை கொடுக்க ஏன் பணம் இல்லை?
10. மத்திய அரசின் மீதான கடன் 2014ல் 56 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது 139 லட்சம் கோடியாக அதிகரித்து, மார்ச் 2023க்குள் 156 லட்சம் கோடியாக இருக்கும். ஏன் நாட்டை கடனில் மூழ்கடிக்கிறீர்கள்?

imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.