இருவரை பலிகொண்ட குற்றாலம் வெள்ளப்பெருக்கு… முதலுதவி மையம் கூட இல்லாததால் ஏற்பட்ட சோகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், வன பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் ஒருவரை மீட்ட நிலையில் மற்ற இரண்டு பேர் தடுப்புகளை பிடித்துக் கொண்டு வெள்ளத்திலிருந்து தப்பியுள்ளனர். இருந்த போதும், இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறைகளில் முட்டி பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
image
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மேலும் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், தற்போது சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர், “தற்போது, குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அருவியல் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
image
இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மல்லிகா, மற்றொருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலாவதி என்றும் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான இழப்பீடு ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல் குற்றாலம் அருவிகளில் இதற்கு முன்பு இருந்த முதலுதவி சிகிச்சை மையம் தற்போது இல்லாத சூழலால் அவசர முதலுதவி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.