எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… நானும் காட்டை ஆளுறேன்…! இன்று உலக புலிகள் தினம்!| Dinamalar

காட்டுக்கு ராஜா சிங்கம் என்றாலும், ‘எனக்கு ராஜாவாக வாழுறேன்; நானும் காட்டை ஆளுறேன்’ என சொல்லாமல் சொல்வது போல தான் புலிகளின் உறுமலும், முறைப்பும் இருக்கும்.நமக்கே தெரியாமல் இயற்கைக்கு பல நன்மைகளை செய்யும் தேசிய விலங்கான புலிகள் குறித்து, புலிகள் தினமான இன்று அறிந்து கொள்வது நம் கடமை.

மதுரை இயற்கை ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 200 முதல் 300 கோடி ரூபாய் செலவில், 52 புலிகள் சரணாலயங்கள் பராமரிக்கப்படுகின்றன.தமிழகத்தில் ஐந்து சரணாலயங்களில், 6,194.97 சதுர கி.மீ., புலிகளின் கோட்டையாக உள்ளது. இத்தனை வசதிகள் இருந்தும், 10 ஆண்டுகளில் 1,059; கடந்த ஆண்டில், 127, இந்த ஆண்டில், 75 புலிகள் இறந்துள்ளன.வைகை, தென்னக நதிகளின் ஆதாரமான ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் சரணாலயம் நாட்டின், 51, தமிழகத்தின் ஐந்தாவது சரணாலயம்.ஹிந்து நம்பிக்கைப்படி, அம்மன், ஐயப்பனின் வாகனமாக புலி உள்ளது. அதிலும், ஐயப்பனின் வன்புலி வாகனமாக இந்திரன் வந்தார் என கூறுவர்.

‘பாந்தெரா டைகிரிஸ்’ என்ற புலியினத்தில் ஒரு வகை வங்காள புலி என்ற ராயல் பெங்கால் புலிகள். நாம் தற்போதுள்ள புலிகளை இந்த பெயரிலேயே அழைக்கிறோம்.
பிச்சாவரம், சுந்தரவன புலிகள் கிழக்கு கடற்கரை வழி பயணித்திருக்க வாய்ப்புள்ளது. புலிகள் நன்றாக நீந்தும், நுகரும், பாயும், பதுங்கும், வேட்டையாடும் திறன் கொண்டது.

தாவர உணவு உண்ணும் காட்டெருமைகளுக்கு ஏற்ப, மாமிசம் உண்ணும் புலிகள் இருக்க வேண்டும். இதன் எண்ணிக்கை கூடினாலோ, குறைந்தாலோ உணவு சங்கிலி, சூழலியல் பாதிக்கும்.

கணக்கில், அறிவியலில் புலி என அறிவுடையவர்களை போற்றும் இச்சமூகம் தேசிய விலங்கான புலிகளையும், அதன் மூலம் இயற்கையும் பாதுகாக்க வேண்டும்.சிங்கத்திற்கு இணையாக காடுகளை ஆள்வதுடன், இயற்கையை பாதுகாக்கும் புலிகளை காப்பதால் வன பரப்பளவு நீளும். நீரின் வளம் பெருகும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.