சின்னாளபட்டி பேரூராட்சியில் சிக்கல்: கருப்பு துணி கட்டி எதிர்க்கும் திமுக-வினர் – நடப்பது என்ன?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் இருக்கின்றன. இதில் 17 வார்டுகளில் தி.மு.க உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மீதமிருக்கும் ஒரு வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் என்பவர் வெற்றி பெற்ற பின்பு தி.மு.க-வில் இணைந்​ததால்,​​ மொத்தம் 18 தி.மு.க கவுன்சிலர்கள் இருக்கின்றனர். இவர்களில் பேரூராட்சி மன்றத் தலைவ​ராக​​ பிரதீபா​வும், துணைத்தலைவராக ஆனந்தி​யு​ம் பதவி வகிக்கின்றனர்.

கூட்டம்

இந்த நிலையில் ​பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் பேரூராட்சி வளாகம் மாடியில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா தலைமைத் தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தி​ ​முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றுப் பேசினார்.

​​கடந்த முறைக் கூட்டத்தில் போடப்பட்ட தீர்மான புத்தகத்தை​ப்​ பார்க்க வேண்டும் என அனைத்து வார்டு உறுப்பினர்களும் கேட்டுக் கொண்டதால் பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா​​ கூட்டத் தீர்மான புத்தகத்தை கவுன்சிலர்கள் பார்வையிடக் கொடுத்தார். அதைப் பார்த்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும், “2​-வது கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்ததாக எழுதியிருக்கிறீர்களே?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கருப்புத்துணி கட்டி போராட்டம்

அதற்கு பேரூராட்சித்​ ​தலைவர்​,​ “கூட்டத்தில் தீர்மான ஒப்புதலுக்கு 18 கவுன்சிலர்களில் 6 பேர் இருந்தால் மட்டும் போதும், தீர்மானம் நிறைவேற்றியதாக எழுதிக் கொள்ளலாம்” என்றார். ​இதை வார்டு உறுப்பினர்கள் ஏற்காததால் வாக்குவாதம் தொடர்ந்தது. ​அதில், “எதற்கு நாங்கள் கூட்டத்துக்கு வரவேண்டும்” என்று கேட்டதோடு, “பேரூராட்சி மன்றத் தலைவரின் கணவர் கனகராஜ் பேரூராட்சியில் அனைத்து வேலைகளிலும் தலையிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் பெண் உள்ளாட்சிப் பிரநிதிகளின் கணவர்கள் அலுவலகப் பணியில் தலையிடக்கூடாது என உத்தரவிட்டும் பேரூராட்சி ​​தலைவரின் கணவர் அத்துமீறி செயல்படுவதோடு, வார்டு உறுப்பினர்களுக்கு மிரட்டலும் விடுகிறார்.​ மேலும், பெண் வார்டு உறுப்பினர்களின் உயிருக்கும் முறையான பாதுகாப்பு இல்லை” எனக் கூறி வார்டு உறுப்பினர்கள் வேல்விழி, ஜெயகிருஷ்ணன் செல்வகுமாரி, ஹேமா, லட்சுமி, காமாட்சி, ராஜாத்தி, ராசு, செல்வி, தாமரைச்செல்வி உட்பட 10 வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி வெளிநடப்பு செய்தனர்.

​அதன்பி​றகும்​ பேரூராட்சி வளாகத்தில் தி.மு.க-வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வெளிநடப்பு 10 வார்டு உறுப்பினர்களும் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையம் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வார்டு உறுப்பினர்கள்

அப்போது​ வார்டு உறுப்பினர்கள், “பேரூராட்சித் தலைவர் பிரதீபாவின் அலட்சியப் பேச்சு மற்றும் அவர் கணவர் கனகராஜின் மிரட்டல்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் நாங்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். ​ சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் ​போடப்பட்ட ​முதல்​ ​கூட்டம் முதல் இதுவரை நடந்த ​அனைத்து கூட்டங்க​ளிலும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சித்​ ​தலைவ​ருக்கு​​​ எதிராக வெளிநடப்பு​ செய்திருக்கிறோம்” என்றனர்.

இது தொடர்பாக 7-வது வார்டு உறுப்பினர் ஹேமாவிடம் பேசினோம். “உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமலே தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அனைத்துக் கூட்டங்களின்போதும் தலைவரின் செயல்பாடுகளில் திருப்தியின்றி பெரும்பாலான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஆனால் தீர்மானம் மட்டும் அவர்களாக நிறைவேற்றிக் கொள்கின்றனர். அனைத்து வார்டுகளிலும் அனைத்து நடவடிக்கைகளிலும் தலைவரின் கணவர் தலையீடு இருக்கிறது. இது குறித்து கேட்பவர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கின்றனர்” என்றார்.

தர்ணா போராட்டம்

பேரூராட்சித் தலைவர் பிரதீபாவிடம் பேசினோம். “7-வது வார்டு உறுப்பினர் ஹேமா, 18-வது வார்டு உறுப்பினர் தாமரைச்செல்வி ஆகியோர் தலைவர் பதவிக்கு எதிர்பார்த்து வேலை செய்தனர். எங்கள் குடும்பம் 15 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்ததன் அடிப்படையில் எங்களுக்கு பதவி கிடைத்தது. இதைத் தாங்கி கொள்ள முடியாத அவர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். என் கணவர் தலையீடு எதிலும் இருந்ததில்லை. அனைத்து முடிவுகளையும் நானேதான் எடுக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.