நடிகை வீட்டிலிருந்து மேலும் ரூ.29 கோடி பணம், தங்கம் பறிமுதல் – மே.வங்க அமைச்சருக்கு கடும் நெருக்கடி

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின் போது அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அர்பிதா தற்போது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு அவரின் மற்றொரு வீட்டில் சோதனையிடப்பட்டது.

இதில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அவற்றை எண்ணி முடிக்கவே பல மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதோடு வீட்டில் இருந்து 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடியாகும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த பணம் 50 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பணம் அனைத்தையும் அர்பிதா, தான் தொடர்புடைய கம்பெனியில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக பணத்தை ஓரிரு நாளில் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் அர்பிதா தெரிவித்தார். அதற்குள் அதிகாரிகள் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்துவிட்டனர். தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

லாரியில் பணம் ஏற்றப்படுகிறது

இதற்கிடையே பாஜக-வை சேர்ந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவுடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 38 பேர் தொடர்பில் இருப்பதாக தெரிவித்திருப்பதை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சாந்தனு சென் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற ஒரு நிலை மேற்கு வங்கத்தில் எந்நேரமும் ஏற்படலாம் என்று மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென் அளித்துள்ள பேட்டியில், “மிதுன் சக்ரவர்த்தி சொல்வதை மேற்கு வங்கத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.