புனேயில் காட்சிப்படுத்தப்பட்டநேரு ஏற்றிய மூவர்ணக்கொடி| Dinamalar

புனே : கடந்த 1946ல் உத்தர பிரதேச மாநிலத்தில், ஜவஹர்லால் நேரு ஏற்றிய மூவர்ணக்கொடி, தற்போது புனேயில் மீண்டும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன், 1946 நவம்பர் 24ல், உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள விக்டோரியா பூங்காவில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்தது.இதில் பங்கேற்ற ஜவஹர்லால் நேரு, கதர் துணியில் தயாரிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை ஏற்றினார். அப்போது இருந்த கொடியின் நடுவில், அசோக சக்கரம் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக ராட்டை இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும், அந்தக் கொடி, நேதாஜி தலைமையில் செயல்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் இடம் பெற்றிருந்த மேஜர் ஜெனரல் கன்பத் ராமிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்பத் ராமின் மறைவுக்குப் பின், அவரது குடும்பத்தினர், அந்த கொடியை பாதுகாத்து வந்தனர்.
கன்பத் ராமின் பேரன் தேவ் நாகர், தற்போது அந்த கொடியை பாதுகாத்து வருகிறார். நாட்டின் 75வது சுதந்திர ஆண்டையொட்டி, தற்போது இந்த கொடி, மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கல்லுாரியில் பொதுமக்கள் பார்ப்பதற்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தேவ் நாகர் கூறியதாவது:
பெருமை மிக்க இந்த கொடியை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். அவ்வப்போது சூரிய வெளிச்சத்தில் சில நிமிடங்கள் காய வைத்து, பின் மீண்டும் மடித்து வைத்து விடுவோம். உரிய முறையில் பாதுகாத்தால், இன்னும், 200 – 300 ஆண்டுகளுக்கு இந்த கொடியை இதே நிலையில் வைத்திருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.