“உங்களுக்கு எனது வாழ்த்துகள், எஞ்ஜாய்” – அண்ணா பல்கலை., மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பிரதமர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இடநெருக்கடி காரணமாக வேறு இடங்களில் அமரவைக்கப்பட்ட மாணவர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விழாவில் பேசிய பிரதமர், “இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூட பங்கேற்றிருக்கிறார். இந்த நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்றிருந்தார்.

இதனிடையே, இந்த விழாவின் மைய அரங்கில் மாணவர்கள் குறைவான அளவே அமர வைக்கப்பட்டிருந்தனர். இடநெருக்கடி காரணமாக மற்ற மாணவர்கள் பக்கத்து அறைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். இதை அறிந்த பிரதமர் கிளம்பும் தருவாயில் அந்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பான காட்சிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், “பிரதமர் மோடியின் பண்பும் பணிவும் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கான பாடம். இட நெருக்கடி காரணமாக சில மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் அமர முடியாமல் பக்கத்து அறைகளில் அமர்ந்திருந்தனர். இதை அறிந்த பிரதமர், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார், பிரதமரின் பண்பைக் கண்டு நெகிழ்ந்த மாணவச் செல்வங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பிரதமர் “உங்களுக்கு எனது வாழ்த்துகள். எஞ்ஜாய்” என்று கூற மாணவர்களும் பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன்பின் பிரதமர் மோடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.