நெருப்புடன் விளையாட வேண்டாம் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை| Dinamalar

பீஜிங்:’தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைத்து, நெருப்புடன் விளையாட வேண்டாம்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தைவானுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது.

அமெரிக்கா தலையிடும்

இதற்கிடையே, 1997ல், அப்போதைய அமெரிக்க பார்லி., சபாநாயகர் நியூட் கிங்ரிச் தைவான் சென்றார். ‘சீனா தைவானை தாக்க முயன்றால், அமெரிக்கா தலையிடும்’ என எச்சரித்தார். இதை, சீனா வன்மையாக கண்டித்தது. இந்நிலையில், தற்போதைய அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சீன அதிபர் ஜிங்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து, சீனாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சீனாவின் அங்கமான தைவானில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், ஜிங்பிங் தெரிவித்துள்ளார். புதிய உறவுகளை உருவாக்க, எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை.

கேள்விக்குறி

மீறி தலையிட்டால், இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் பிரிய நேரிடும். இது, உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, 140 கோடி மக்களுக்கு முக்கியம். இதை மீறி நெருப்புடன் விளையாடுவோர், சாம்பலாகிப் போவது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சீனாவின் எச்சரிக்கை காரணமாக, நான்சி பெலோசி தைவான் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.