முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிட உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிடுங்கள். பிரதான எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி முன்மொழிவு

எதிர்காலத்தில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிட தான் முன்மொழிவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் (சமகி ஜன சந்தானய) இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேலும் கூறியதாவது:-

“சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளையும் நாங்கள் அழைத்துள்ளோம். அதற்காக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாட்டின் பொருளாதாரம் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இருந்து மீள அனைவரும் இணைந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை ஏற்று சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி இந்த நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு (சமகி ஜன சந்தானய) சர்வகட்சி அரசாங்கத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைக்கிறேன். இவர்கள் அனைவரும் என்னுடன் பணியாற்றியவர்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் ஒன்றாக வேலை செய்ய முடியும்.

1941 ஆம் ஆண்டு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துக்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டது. முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக ஆக்கப்பட்டது. அதே மரபை நாமும் செயல்படுத்தலாம்.

1977 ஆட்சி மாற்றத்தில் 5/6 அதிகாரம் பெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டு நாடு கட்டியெழுப்பப்பட்டது. ஆனால் இப்போது 5/6 அதிகாரத்தாலும் சர்வகட்சி அரசாங்கம் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஒரே வழி சர்வகட்சி ஆட்சி மாத்திரமே ஆகும்.

சமீபத்திய வன்முறைச் செயல்கள் காரணமாக, நாங்கள் அவசரகால உத்தரவை விதிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவசரகால உத்தரவை தொடர்வதற்கு  நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தின்போது சில சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும். அதற்கு அவசரகால சட்டம் தேவை.

இங்கு கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச அவர்கள் கூறியதாவது:-

 அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லுமாறு நாங்கள் பரிந்துரைக்க விரும்புகின்றோம். அன்று நாட்டின் பிரதமராக நீங்கள் 19வது திருத்தத்தை கொண்டு வர தலைமைத்துவம் வழங்கினீர்கள். அது மிகவும் நல்ல ஒரு நகர்வு ஆகும். எனவே, இதனை மேலும் முன்னெடுத்துச் செல்லுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் 19வது திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபைகளின் எண்ணிக்கை 20வது திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தச் சட்டத்தில் இருந்தபடியே அதனைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என்பதை நினைவு கூர விரும்புகின்றேன்.

இன்று நாட்டில் நிலவும் மிகப் பெரிய பிரச்சினை, மக்கள் மீது பெரும் பொருளாதாரச் சுமை சுமத்தப்பட்டுள்ளமை ஆகும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், தற்போதுள்ள அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பாராளுமன்றத்தில் துறைசார் குழுக்களை அமைத்தால் மட்டும் போதாது. இது தவிர மேலும் பல குழுக்களை அமைப்பதில் கவனம் செலுத்த பரிந்துரைக்கின்றோம்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு (சமகி ஜன சந்தானய)  நேர்மறை எண்ணங்களுடன் இன்று இந்த கலந்துரையாடலுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில், ஒரு நாடாக, நாம் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போது அசாதாரணமான அரசியல் சூழ்நிலை உள்ளதென்றே கூற வேண்டும். அதனை முழுமையாகப் புரிந்து கொண்டு இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அவர்கள்:-

வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகின்ற போதிலும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு இந்த சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன். அண்மையில் நீங்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்த கொள்கைப் பிரகடனம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் குழுவின் வேலைத்திட்டமும் அதற்கு இணையானது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

 

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாஅவர்கள்:-

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவது எம் அனைவரினதும் பொறுப்பு ஆகும்.

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது பயனுள்ளதாக இல்லை. தற்போதுள்ள பிரச்சனைக்கு அதை தீர்வாக நான் பார்க்கவில்லை. தற்போது நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டியதே அவசியமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹசீம், கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கருத்துத் தெரிவித்ததுடன், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-05

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.