கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு: வேறு பள்ளியில் படிக்கப் போவதாக விண்ணப்பித்துள்ள மாணவர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அமைதியான போராட்டமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது.
அந்த வன்முறையில் பள்ளி கட்டடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு பள்ளி பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் நடந்த வன்முறையில் பள்ளியில் படித்த மாணவர்களின் பள்ளி சான்றிதழ்கள் மற்றும் சுயவிபர சான்றிதழ்கள் அனைத்தும் திருடப்பட்டுவிட்டதாகவும் தீயில் கருகிப்போனதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டது. இதனால் பள்ளியில் படித்து வந்த 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் நிலை கேள்விக்குறியானது.
image
மாணவி இறந்து போய் இந்த கலவரம் ஏற்பட்டது முதலான 13 ஆம் தேதி முதல் 26 தேதி வரை பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், 3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 27 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். இதற்காக அருகே உள்ள மூன்று பள்ளி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாதகவும் தெரிவித்திருந்தார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து இந்த மாதம் முதல் நாளிலிருந்து ஏ. வாசுதேவனூர் அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரியில் தற்காலிகமாக 9, 10, 11 மற்றூம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. காலை 9மணி அளவில் வகுப்புகள் தொடங்கப்படும் எனஅறிவித்த நிலையில் 8 மணியிலிருந்தே மாணவ மாணவிகள் வரத் தொடங்கினர். பள்ளி மாணவர்களின் ஊர்களுக்கே நேரடியாகச் சென்று பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பில் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
image
இந்நிலையில் மாணவர்களின் பள்ளி சான்றிதழ்களை பெற்று தருவதற்ககும் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கும் உதவும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ தலைமையில் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி தற்போது வரை சக்தி பள்ளியில் படித்த 2000க்கும் உட்பட்ட மாணவ மாணவியர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். இதில் 180 மாணவ மாணவியர்கள் தாங்கள் வேறு பள்ளியில் படிக்க போவதாக விண்ணப்பித்து விரைவில் தங்களது சான்றிதழ்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.