நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் போது குற்ற வழக்கில் சிக்கிய எம்பிக்களுக்கு சிறப்புரிமை உண்டா?.. கடைசி நாளில் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் போது குற்றவழக்கில் சிக்கிய எம்பிக்களுக்கு சிறப்புரிமை உண்டா? என்பது குறித்து தனது பணியின் கடைசி நாளில் ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு உதாரணத்துடன் விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த ஆளும் பாஜக அரசு மறுத்து வருவதால், பல்வேறு கட்ட போராட்டங்களை எம்பிக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இருந்தும் 23 எம்பிக்களுக்கு எதிராக இரு அவைகளிலும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் குற்றவழக்கில் சிக்கிய எம்பிக்கள், சிறப்புரிமை அடிப்படையில் அவரிடம் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தக் கூடாது என்று கூறப்படுவதால், அதுகுறித்த விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடந்தது. இந்த கூட்டத் தொடரின் போது சிவசேனா மூத்த எம்பி சஞ்சய் ராவத் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் இருந்ததால், அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் இரு முறை சம்மன் தேதியில் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. அவரது தரப்பில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால், தான் அமலாக்கத்துறை முன் ஆஜராக முடியாது என்றும், கூட்டத் தொடர் முடிந்த பின்னர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அதனால் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, குற்றவழக்கில் சிக்கிய எம்பிக்களிடம் விசாரணை நடத்தலாம் என்று தெரியவந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நேற்று (கூட்டத் தொடரில் பங்கேற்கும் கடைசி நாள்) ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக, எம்பிக்களின் சிறப்புரிமை குறித்து அவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எம்பிக்கள் மீது விசாரணை அமைப்பால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தவறான கருத்து நிலவுகிறது. அரசியலமைப்பின் 105வது பிரிவின் அடிப்படையில், தங்களது நாடாளுமன்ற கடமைகளை நிறைவேற்ற எம்பிக்களுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அல்லது நாடாளுமன்றக் குழு கூட்டம் கூடிய 40 நாட்களுக்கு முன்பும், 40 நாட்களுக்குப் பிறகும் சிவில் வழக்குகளில் எந்தவொரு எம்பியையும் கைது செய்ய முடியாது என்ற சிறப்புரிமை உள்ளது. இருப்பினும், கிரிமினல் வழக்குகளில் இந்த விதி பொருந்தாது. மேலும் இந்த விதி கிரிமினல் வழக்குகளில் இருந்து எம்பிக்களுக்கு விலக்கு அளிக்காது. கிரிமினல் வழக்குகளை பொருத்தமட்டில், எம்பிக்களும் சாதாரண குடிமக்களைப் போன்றவர்கள்தான். எனவே நாடாளுமன்ற கூட்டத் தொடர் அல்லது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது குற்றவழக்கில் சிக்கிய எம்பியை கைது கூட செய்யலாம் என்பதை இச்சட்டப் பிரிவுகள் காட்டுகின்றன. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. நாடாளுமன்றக் கடமைகளை நிறைவேற்றுவதைக் காரணம் காட்டி, எந்த ஒரு உறுப்பினரும் விசாரணை அமைப்புகளின் முன் ஆஜராக மறுக்க முடியாது. அவர்கள் சட்டம்-ஒழுங்கு செயல்முறையை பின்பற்ற வேண்டியது அவசியம். அதுதான் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளுக்கு முன் ஆஜராவதற்கு முன்பாக அடுத்த தேதியைக் கேட்கலாம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளையும் கொடுத்துள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.