46 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை கப்பல் கொழும்பு வந்தடைந்தது

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள் (ஆகஸ்ட் 05) முதல் முறையாக அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) கப்பலில் ஒன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட போது இந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் ஆஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய எல்லை படையின் ரோந்துக் கப்பலான ‘ஓஷன் ஷீல்ட்’ ல்அழைத்தகுவரப்பட்ட இவர்கள் கொழும்பு துறைமுகத்தில் வைத்து, கோவிட் சுகாதார நடைமுறைகள் மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனைக்களுக்கு உட்படுத்தப்பட்ட பின் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த ஆஸ்திரேலிய எல்லை படை தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் கமாண்டர் கிறிஸ் வாட்டர்ஸ், இவ்வருடம் (2022) மே மாதம் தொடக்கம் இதுவரை 6 சந்தர்ப்பங்களில் கடல் மார்க்கமாக சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்ட 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் சட்டவிரோத கடல்மார்க்க குடியேற்ற முயற்சிகள் தொடர்பில் கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார சட்டவிரோத குடியேற்ற முயற்சிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் ஆஸ்திரேலிய எல்லை படை ஆகியவற்றின் கடல் ரோந்து நடவடிக்கைகள் காரணமாக சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளின் தடுக்கப்பட்டுள்ளன அவ்வாறான முயற்சிகளின் ஈடுபட்டு ஆட்கடத்தல் குழுக்களிடம் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

ஆஸ்திரேலிய எல்லை படை கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்படுவது இதுவே முதல் தடவையாகும். அவுஸ்திரேலிய எல்லை படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ தொலைதூர ரோந்து நடவடிக்கைகள் மூலம் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகராக பரிந்துரைக்கப்பட்டுள்ள, போல் ஸ்டீபன்ஸ், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இலங்கை கடற்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு திருப்பியனுப்பட்ட இக்குழு இவ்வாண்டு (2022) ஜூலை (06) மாதம் மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து பலநாள் மீன்பிடி படகொன்றில் அவுஸ்திரேலிய நோக்கி சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 17 முதல் 49 வயதுடைய இவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபிலை மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அவுஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இக்குழுவினர் கடற்படையின் ஊடாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.