‘பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட்டதில்லை’ – பிரதமர் மோடி

மத் (மகாராஷ்டிரா): “60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கும் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் வறுமையை ஒழிப்பதைப் பற்றி பேசினார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து நான் மீட்டுள்ளேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உங்களின் அன்பே எனது பலம். கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்க்கையை உங்களுக்கு உழைப்பதற்காகவே அர்ப்பணித்துள்ளேன். காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை நாங்கள் 10 ஆண்டுகளில் சாதித்துள்ளோம்.

ஒரு நிலையான அரசு எதிர்காலத்தின் தேவைகளை மனதில்கொண்டு நிகழ்காலத்தில் செயல்படுகிறது. இன்று ரயில்வே, சாலைவசதி மற்றும் விமானநிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்புக்கான எங்களின் ஆண்டு பட்ஜெட் காங்கிரஸ் அரசின் பத்து ஆண்டுகால உள்கட்டமைப்பு பட்ஜெட்களுக்கு சமம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய தலைவர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இங்கு வந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போது அதற்கு தண்டனை கொடுக்கும் வேலை வந்து விட்டது. அது விதர்பாவாக இருந்தாலும், மாராத்வாடாவாக இருந்தாலும் சரி, ஒரு சொட்டு தண்ணீருக்காக ஆண்டாண்டு காலமாக மக்களை காக்கவைப்பது மிகவும் பாவம்.

இந்த நாடு தங்களை ஆள காங்கிரஸுக்கு 60 ஆண்டுகள் வாய்ப்பு அளித்தது. இந்த 60 ஆண்டுகளில், உலகில் உள்ள பல நாடுகள் முற்றிலுமாக மாறிவிட்டது, ஆனால் இந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கவில்லை. 2014-ம் ஆண்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான நீர்பாசனத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 26 திட்டங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. மகாராஷ்டிராவுக்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்.

விக்சித் பாரதத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் மோடி விட்டுவைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் சுயஉதவிக்குழுவில் இணைந்துள்ளனர். கிராமங்களின் வேகமான வளர்ச்சிக்கு பெண்கள் மிகவும் பங்களித்துள்ளனர். ஒரு கோடி பெண்களை நாங்கள் லக்சாதிபதி சகோதரிகளாக உருவாக்கியுள்ளோம். இந்தியா விரைவில் 3 கோடி லக்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இது மோடியின் உத்திரவாதம்” இவ்வாறு பிரதமர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.