Doctor Vikatan: பிரசவ தேதியைக் கடந்தும் டெலிவரி ஆகவில்லை… காலம் கடப்பது ஆபத்தானதா?

என் மகளுக்கு பிரசவ தேதி நெருங்குகிறது. ஆனாலும் அவளிடம் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. குறைமாதப் பிரசவம் போல, நிறை மாதம் கடந்த பிரசவமும் சாத்தியமா? எதிர்பார்க்கப்பட்ட பிரசவ தேதிக்குப் பிறகு எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்? அப்படிக் காத்திருப்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

37 வாரங்கள் முடிவடைந்த நிலையில் அதை நிறைமாத கர்ப்பம் என்று சொல்வோம். கர்ப்பிணிகள் பொதுவாக 37 முதல் 40 வாரங்களில் குழந்தை பெற்றாக வேண்டும். பிரசவ தேதியைத் துல்லியமாகக் கணிக்க வேண்டுமென்றால் கர்ப்பம் உறுதியான காலகட்டமும் சரியாக கணிக்கப்பட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி முறையாக இருக்கும் பட்சத்தில், கடைசி மாதவிலக்கான நாளின் அடிப்படையில் பிரசவ தேதியைக் கணக்கிடலாம்.

ஒருவேளை முறைதவறிய மாதவிலக்கு சுழற்சி கொண்டவர்கள் என்றால், முதல் 3 மாத கர்ப்பத்தில் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் அடிப்படையில் பிரசவ தேதியை கணிக்கலாம். 8 முதல் 12 வாரங்களில் செய்யப்படும் ஸ்கேனை ‘டேட்டிங் ஸ்கேன்’ ( Dating scan) என்று சொல்வோம்.

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு 37 முதல் 40 வாரங்களில் பிரசவம் நிகழ்ந்துவிடும். அவர்களில் 5 சதவிகிதம் பேருக்கு இப்படி பிரசவ தேதியைத் தாண்டியும் பிரசவம் ஆகாமலிருக்கலாம். 40 வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில் பிரசவம் ஆகாவிட்டால் குழந்தைக்கும் தாய்க்கும் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரிந்துகொள்வோம்…

கர்ப்பிணி

குழந்தைக்கு….

குழந்தை தொடர்ந்து பெரிதாக வளர்ந்து கொண்டே போகும்.

குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம்.

குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைந்து பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

குழந்தை தாயின் வயிற்றிலேயே மலம் கழிக்கலாம்.

அரிதாக சில குழந்தைகள் தாயின் கர்ப்பப்பைக்குள்ளேயே இறந்தும் போகலாம்.

அம்மாவுக்கு…

பெரிய குழந்தையைப் பிரசவிக்கும் முயற்சியில் தாயின் வெஜைனா மற்றும் வெஜைனாவுக்கும் ஆசனவாய்க்கும் இடையிலான பகுதிகளில் காயங்கள் ஏற்படலாம்.

சிசேரியனுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

பிரசவ தேதி கடந்துவிட்ட நிலையில், குழந்தையின் நிலையைக் கண்காணிக்க, ‘பயோபிசிகல் புரொஃபைல்’ எனும் ஸ்கேன் செய்யப்படும்.

40 வாரங்களில் கர்ப்பிணியின் இடுப்பெலும்புப் பகுதியை சோதனை செய்து பார்த்து, கர்ப்பப்பையின் வாயானது பிரசவிக்க ஏற்றதாக இருக்கிறதா என்று பார்ப்போம். சில மருத்துவர்கள் பிரசவ வலி வருவதற்காக 41 வாரங்கள்கூட காத்திருப்பதுண்டு. கர்ப்பப்பை வாய், பிரசவிக்கத் தயார்நிலையில் இருப்பது தெரிந்தால் செயற்கையாக பிரசவ வலியைத் தூண்ட கர்ப்பிணிக்கு மருந்துகள் கொடுப்போம்.

கர்ப்பிணி

கர்ப்பப்பை வாயானது சாதகமாக இல்லாத நிலையில் NST ( Non Stress Test), AFI( Amniotic Fluid Index), BPP( Biophysical Profile) போன்ற டெஸ்ட்டுகளின் மூலம் குழந்தையைக் கண்காணிப்போம். இந்த டெஸ்ட்டுகள் எல்லாம் நார்மல் என்ற நிலையிலோ, கர்ப்பிணிக்கு வலி வரும்பட்சத்திலோ உடனடியாக டெலிவரி பார்ப்போம்.

ஒருவேளை குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் பிரசவிக்க ஏற்ற நிலையில் இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, உடனே சிசேரியன் செய்ய முடிவெடுப்போம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.