கல்விக்கும், மருத்துவத்துக்குமான நலத்திட்டங்கள் இலவசமா? – தமிழக முதலமைச்சர் விளக்கம்

கல்விக்கும், மருத்துவத்துக்குமான நலத்திட்டங்கள் இலவசத்தின் கீழ் வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய முதலமைச்சர், சுகாதார மையத்திற்கும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி அழகுபடுத்தும் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அரசுப் பள்ளி ஒன்றில் டென்னிஸ் மைதானத்தையும் திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், இலவசங்கள் கூடாது என்று கூறுவது பற்றி கவலையில்லை என்றார். “இலவசம் வேறு.. நலத்திட்டங்கள் வேறு..என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தற்போது நாட்டில் பெரிய விவாதமே நடந்து கொண்டுள்ளது. கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் செய்யும் செலவு இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது, உடல் நலம் சார்ந்தது” என்று குறிப்பிட்டார். பின்னர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மறைமுகமாக அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், இலவச கல்வி, மருத்துவம் வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் அளிப்பதை இலவச அறிவிப்பாக கூறியதில்லை. தற்போது இது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறியதன் மூலம், ஏழை, எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.