திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு: தேவஸ்தான கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் கைது…

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முறைகேடாக வி.ஐ.பி. தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விற்பனைக்கு செய்து வந்த தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மற்றும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கொரோன கட்டுப்பாடுகள் நீக்கிய பிறகு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய வெள்ளி, சனி, ஞாயிறு என வர விடுமுறை நாட்கள் மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினந்தோறும் 70,000 பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்த போதிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்து கிடக்கும் நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி முறைகேடாக டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதற்கு தேவஸ்தானத்தில் பணிபுரியும் சில அதிகாரிகளும், ஊழியர்களும் துணை போவதாக தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய விஜிலென்ஸ் அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனா முறைகேடாக 760 வி.ஐ.பி. தரிசன டிக்கெட் 350 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25 சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு கொடுத்தது தெரியவந்தது. அதேபோன்று 32 அறைக்கான ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடந்துள்ளது. இதன் மூலம் லட்ச கணக்கில் பணம் கைமாறியது உறுதியானது. இதையடுத்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனா மற்றும் 2 பெண்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது திருமலை முதலாவது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கால்கடுக்க நின்று சுவாமி தரிசனம் செய்யும் நிலையில் சிறப்பு தரிசன டிக்கெட்டை கொள்ளை விலைக்கு விற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.