நுபுர் சர்மாவை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி உ.பி.யில் கைது

லக்னோ: பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொல்லத் திட்டம் தீட்டியதாக தீவிரவாதி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாஜக செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது இறை தூதர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல முஸ்லிம் நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வழக்கு தொடரப்பட்டன.

இதையடுத்து ​​தனக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரி நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதற்கு நுபுர் சர்மாவைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அண்மையில் அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், நுபுர் சர்மாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக உத்தரபிரதேசத்தில் தீவிரவாதி ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு..

உ.பி.யின் ஷஹாரன்பூர் அருகே உள்ள குண்டகாலா கிராமத்தில் வசித்து வரும் 25 வயதான முகம்மது நதீமுக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு மற்றும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் முகம்மது நதீமின் தொலைபேசி உரையாடலை போலீஸார் கண்காணித்து வந்தனர். அப்போது, முகம்மது நதீமுக்கு, ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்துடன் தொடர்பு இருந்ததும், பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை கொல்ல வேண்டும் என்ற இலக்கு அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

மேலும் ஆயுதப்பயிற்சி எடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல அவர் ஆயத்தமாகி இருந்ததாகவும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முகம்மது நதீமின் செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மெய்நிகர் என்று அழைக்கப்படும் விர்ச்சுவல் போன் நம்பர்களை உருவாக்குவது எப்படி என்று தீவிரவாதிகளிடம் முகம்மது நதீம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த சைபுல்லா என்ற நபர், அரசு கட்டிடங்கள் மற்றும் போலீஸார் மீது தாக்குதல் நடத்துவது என்பதுகுறித்து இவருக்கு பயிற்சி அளித்ததாகவும், சிறப்பு பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு அவர் வர வேண்டும் என்று அங்குள்ள தீவிரவாத இயக்கங்கள் முகம்மது நதீமுக்கு உத்தரவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.