அடுத்த 7 நாட்களுக்கு இந்தியாவிற்கு திக்… திக்… வந்துருச்சு சீன உளவு கப்பல் “யுவான் வாங் 5”!

இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பல் மூலம் இந்தியாவை உளவு பார்க்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இலங்கையில் நுழைய அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் அமெரிக்க அரசும் எதிர்ப்பை காட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜுங் பேசினார். சீன கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகம் வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் வலுவான காரணங்களை முன்வைக்க வேண்டும் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி அதிரடியாக பதில் அளித்தார். இருநாடுகளின் எதிர்ப்பு குறித்து சீனாவிற்கு இலங்கை அரசு தகவல் தெரிவித்தது. ஆனால் அதை அர்த்தமற்ற செயல் என்று சீன அரசு அலட்சியம் செய்தது. இதற்கிடையில் சீன உளவு கப்பலுக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

ஆனால் அடுத்த சில நாட்களில் விஷயம் தலைகீழாக மாறியது. 11ஆம் தேதி வரவிருந்த நிலையில் 16ஆம் தேதி வருவது உறுதி என்று இலங்கை துறைமுகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பலை நிறுத்த அனுமதி கிடைத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) காலை இலங்கைக்கு சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” வந்து சேர்ந்தது.

இது வரும் 22ஆம் தேதி வரை இலங்கை துறைமுகத்தில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாட்களும் இந்தியா உஷாராக இருக்க வேண்டும். உளவுத்துறை எச்சரிக்கையாக செயல்பட்டு சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் ஏதேனும் எழுந்தால் அதை உடனே தடுக்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்து கொண்டிருக்கிறது. இதனால் பிற நாடுகளில் இருந்து கடன் வாங்கி தங்கள் நிலையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு உதவும் நாடுகளில் முதன்மையாக இருப்பது சீனா. எனவே சீனாவின் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு சென்றிருக்கிறது.

அதேசமயம் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு நாங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளோம். எனவே எங்களுக்கு அப்பகுதியில் முழு உரிமை இருக்கிறது என்பது போல் கடும் எதிர்ப்பையும் மீறி உளவு கப்பலை சீனா கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் புதிய சர்ச்சைகளுக்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.