ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கவர தன்னார்வ அமைப்பு புது முயற்சி…

ஈரோடு : ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவலுக்கு பின் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் பள்ளிகள் தொடங்கப்பட்ட போதிலும் மலை கிராமங்களில் பழகுடியின குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவது சிக்கல் நீடித்து வருகிறது. குடும்ப பொருளாதாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல காரணங்களால் ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களான பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 100கும் மேற்பட்ட சிறார்கள் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்கள் பெற்றோர்களுடன் காடுகளில் வேலை செய்தும், ஆடு, மாடுகளை மேய்த்தும், வெளியூர்களில் கூலி வேலை செய்தும் நாட்களை கடத்தி வருகின்றனர். இவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும் கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும் இடைநின்ற மாணவர்களுக்கு சுடர் தன்னார்வ அமைப்பு கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வேலைக்கு சென்ற சிறார்கள் 40 பேரை தேடி பிடித்து 4 நாட்கள் சுற்றுலாவாக சென்னைக்கு அழைத்து சென்றனர். நகரங்களையும், ரயில்களையும் இதுவரை கண்டிடாத குக்கிராம மாணவர்கள் உற்சாகத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து குதூகலித்தனர். சென்னையில் பிர்லா கோளரங்கம், மெரினா கடற்கரை போன்ற முக்கிய இடங்களை சுதந்திரதின விழா நிகழ்வுகளையும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி இடை நின்றவர்களில் 2018ஆம் ஆண்டு தேசிய அளவில் இளம்விஞ்ஞானியாக விருது பெற்ற வரகூர் மலை கிராம மாணவன் சின்ன கண்ணனும் ஒருவன். கூலி வேலைக்கு சென்று வரும் சின்ன கண்ணனும் இந்த சுற்றுலாவில் பங்கேற்றார். சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியதும் சிறுவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவர்களை வைத்தே பள்ளி செல்ல மற்ற குழந்தைகளையும் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க முடியும் என்ற நம்புகின்றனர் தன்னார்வ அமைப்பினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.