சுகேஷிடம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெற்ற பரிசுகள் என்னென்ன?! – நேருக்கு நேர் நிறுத்தி விசாரணை

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் அமலாக்கப்பிரிவால் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஜாக்குலின், இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இரண்டு பேரையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேருக்கு நேர் நிறுத்தி நடத்திய விசாரணை விபரம் இப்போது முழு அளவில் வெளியாகி இருக்கிறது.

அவர்களிடம், `இதற்கு முன்பு இருவரும் சந்தித்திருக்கிறீர்களா அல்லது பேசியிருக்கிறீர்களா?’ என்று அதிகாரிகள் கேட்டதற்கு, “2021 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் 2021 வரை போனில் பேச ஆரம்பித்தோம். இரண்டு முறை சென்னையில் சந்தித்துக்கொண்டோம்” என்று ஜாக்குலின் தெரிவித்தார். இதே பதிலை சுகேஷ் சந்திரசேகரும் தெரிவித்தார்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் – சுகேஷ் சந்திரசேகர்

`உங்களுக்குள் எப்படி அறிமுகமாகிக்கொண்டீர்கள்?’ என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கேட்டதற்கு, “சேகர் ரத்னா வாலா என்றும், சன் டிவி உரிமையாளர் என்றும், ஜெயலலிதாவின் உறவினர் என்றும் அவர் என்னிடம் அறிமுகமானார்” என்று ஜாக்குலின் தெரிவித்தார். தான், `சேகர் என்று ஜாக்குலினிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதாக’ சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்.

`முதன் முதலில் எப்போது இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, “2021 ஜனவரி இறுதி வாரத்தில் முதன் முதலில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்” என்று ஜாக்குலின் தெரிவித்தார். “2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்” என்று சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

`எப்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் சகோதரிக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கி கொடுத்தீர்கள்?’ என்று சுகேஷ் சந்திரசேகரிடம் கேட்டதற்கு, `எனக்கு நியாபகம் இல்லை’ என்று தெரிவித்தார். ஆனால் முன்பு கொடுத்திருந்த வாக்குமூலத்தில் தான் ஜாக்குலின் சகோதரிக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கிக்கொடுத்ததாக தெரிவித்திருந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், `எனது சகோதரிக்கு சுகேஷ் கார் எதுவும் வாங்கி கொடுக்கவில்லை’ என்று தெரிவித்தார். இதே போன்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெற்றோருக்கு கார்கள் வாங்கினீர்களா என்று சுகேஷிடம் கேட்டதற்கு, `எனக்கு நியாபகம் இல்லை’ என்று தெரிவித்தார். ஆனால் முந்தைய வாக்குமூலத்தில் பஹ்ரைனில் ஜாக்குலின் பெற்றோருக்கு கார் வாங்கி கொடுத்ததாக சுகேஷ் தெரிவித்திருந்தார். ஜாக்குலினோ, `எனது பெற்றோருக்கு சுகேஷ் கார்கள் எதுவும் வாங்கி கொடுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

“அமெரிக்காவில் உள்ள ஜாக்குலின் சகோதரிக்கு எவ்வளவு பணம் ஏற்பாடு செய்து கொடுத்தீர்கள்?” என்று சுகேஷிடம் கேட்டதற்கு, ஜாக்குலின் பெர்னாண்டஸ் 1,50,000 டாலர் என்று தெரிவித்தார். ஆனால் தன்னால் நினைவுபடுத்தமுடியவில்லை என்று சுகேஷ் தெரிவித்தார். ஆனால் முந்தைய விசாரணையில் 1,85,000 டாலர் ஏற்பாடு செய்து கொடுத்ததாக சுகேஷ் தெரிவித்திருந்தார்.

சுகேஷுடன் ஜாக்குலின்

“ஆஸ்திரேலியாவில் உள்ள ஜாக்குலின் சகோதரருக்கு எவ்வளவு பணம் ஏற்பாடு செய்து கொடுத்தீர்கள்?” என்று சுகேஷிடம் கேட்டதற்கு, “எனக்கு ஞாபகம் இல்லை” என்று தெரிவித்தார். ஆனால், `சுகேஷ் 15 லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்ததார்’ என ஜாக்குலின் தெரிவித்தார். இதற்கு முந்தைய விசாரணையில் சுகேஷ் அளித்திருந்த வாக்குமூலத்தில் ஜாக்குலின் சகோதருக்கு 50 ஆயிரம் டாலர் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

“எப்படி இருவரும் பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டதற்கு, “நாங்கள் வாட்ஸ்ஆப், வாட்ஸ்அப் வீடியோ காலில் மட்டும் பேசிக்கொண்டோம்” என்று ஜாக்குலின் தெரிவித்தார். சுகேஷும் வாட்ஸ்அப்பில் மட்டும் பேசிக்கொண்டதாக தெரிவித்தார்.

“எந்த மாதிரியான விலை உயர்ந்த பரிசுப்பொருள்களை இருவரும் பகிர்ந்து கொண்டீர்கள்?” என்று கேட்டதற்கு, “4 பேக், 2 ஷூக்கள், இரண்டு ஜோடி டிரஸ், பெர்பியூம்கள், 4 பூனைகள், 2 வைர மோதிரம், ஒரு வைர பிரேஸ்லெட், மினி கூப்பர் கார் போன்றவற்றை பரிசாக பெற்றேன்” என ஜாக்குலின் தெரிவித்தார்.

ஆனால், “நான் என்ன கொடுத்தேன் என்று எனக்கு நியாபகம் இல்லை” என்று சுகேஷ் தெரிவித்தார். முந்தைய வாக்குமூலம் ஏராளமான பரிசுப்பொருள்களை ஜாக்குலினுக்கு கொடுத்ததாக சுகேஷ் தெரிவித்திருந்தார்.

குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெற்ற பிறகு ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நான் அனைத்து நல்ல விசயங்களுக்கும் தகுதியானவள், நான் மிகவும் வலுவானவள், எனது இலக்குகளையும் கனவுகளையும் அடைவேன், என்னால் அதைச் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.