தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை..! – காவல் துறையை சார்ந்த 17 பேருக்கு சிக்கல்..!

சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. . இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது.
போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது.
இவ்வாறாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.