பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர்

விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பாக, பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. அதன்படி 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சதுரங்கம், வளையப்பந்து, ஆக்கி போட்டிகள் நடந்தது.

வளையப்பந்து போட்டி ஒற்றையர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகள் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டியினை பெரம்பலூர் நகர் மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பரிசு, சான்றிதழ்கள்

இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த 80 பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும், அணிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தேவி, உடற்கல்வி ஆசிரியர் முனைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

முதலிடம் பிடித்தவர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு குழு விளையாட்டு போட்டிகள், தடகள போட்டிகள் நடைபெறவுள்ளது. இதேபோல் குன்னம் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.