ஓட்டேரியில் கலைஞர் நினைவு தின பொதுக்கூட்டம்; கொள்கை ரீதியாக பிரதமரை எதிர்க்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

பெரம்பூர்: கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், ‘உடன்பிறப்பே எங்கள் உயிர்சொல்’ என்ற தலைப்பில் சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் நேற்று பொதுகூட்டம் நடந்தது. இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் தலைமை வகித்தார். இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: சட்டமன்றத்தில் கலைஞரிடம் நான் கற்றது ஏராளம். தவறுகளை தனியாக அழைத்து சுட்டி காட்டி பேசுவார். எதையும் மேம்போக்காக பேச மாட்டார். எதையும் ஆழமாக சிந்தித்து பேசுபவர். வரவு-செலவு திட்டம் தயாரிப்பதில் கெட்டிக்காரர். அவரது நிதி அறிக்கையில் முன்னுரை பக்கத்தை ஒரு புத்தகமாகவே போடலாம். நான் கலைஞர் சிஷ்யன் அல்ல.

காமராஜர் சிஷ்யன். கலைஞர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பத்தில் என்ன தவறு இருக்கிறது. பாஜவில் சிலை வைக்கும் அளவுக்கு தகுதியான தலைவர்கள் யாரும் இல்லை. திமுகவில் தகுதியான தலைவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு சிலை வைக்கிறார்கள். கொள்கை ரீதியாக இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளில் வலிமையாக மோடியை எதிர்ப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘தனக்கென தனி நடை உடை பாவனைகளை உருவாக்கி கொண்டவர் கலைஞர். எம்ஜிஆர் தங்கத்தை போல பளபளவென ஜொலிக்கிறார் என அவர் மீது பலர் அன்பு வைத்திருந்தனர். ஆனால் கலைஞர், தன் ஆற்றல் மூலம் மக்களை தன் பக்கம் ஈர்த்தவர். தோற்றத்தின் மூலம் அல்ல. எம்ஜிஆருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கலைஞர்.

எந்த மாநிலமும் எதிர்க்காத நிலையில் மிசா சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த ஒரே தலைவர் கலைஞர்தான். தந்தையை போல் இருக்க வேண்டும் என்று கருதாமல் தனக்கென தனி பாணியை உருவாக்கி பயணிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என்றார். நிகழ்ச்சியில் தாயகம் கவி எம்எல்எ, மேயர் பிரியா, சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லிபாபு, லயன் உதயசங்கர், சாமிக்கண்ணு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.