திமுக எம்எல்ஏக்களை விலை பேசும் பாஜக?; பகீர் கிளப்பும் அண்ணாமலை!

தமிழ்நாடு அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு புகார்களை முன்வைத்து வருகிறார். அதேப் போல், முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை வைப்பதற்கும் அண்ணாமலை தயங்குவதில்லை.

தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாகவும், அதை விரைவில் வெளியிடுவோம் என்றும் கூட அண்ணாமலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அண்ணாமலை பேச்சை அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் என யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

முதலில் கோயில் விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மக்களிடம் பொய் பேசுவதையே பிழைப்பாக செய்து வருகிறார்’ என சீண்டினார்.

அதற்கு அமைச்சர் சேகர் பாபு, ‘அண்ணாமலை எது வேண்டுமானாலும் பேசட்டும். அவரது விமர்சனத்திற்கு கவலைப்படாமல் எங்களது பாதை, எங்களது பயணம் மக்களை நோக்கி செல்கிறது’ என தடாலடியாக கூறினார்.

இதன் பிறகு அண்ணாமலைக்கும், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே மோதல் போக்குத் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த சில மாதமாக மின்சார துறையில் ஊழல் நடப்பதாக அண்ணாமலையும், ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என செந்தில் பாலாஜியும் சற்று கடுமையாகவே பேசி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த ஜூன் 27ம் தேதி கரூர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, ‘கருணாநிதியை தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு செந்தில் பாலாஜி ஊழல் செய்கிறார்’ என கூறி தெறிக்கவிட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘அண்ணாமலை ஆண் மகனாக இருந்தால் மின் வாரியத்தில் தவறு நடப்பதாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை வழங்கட்டும்’ என கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்து என்ன நடக்குமோ? என

தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் திக் திக் திக் மனநிலையில் இருந்தபோது பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மீது அண்ணாமலை திடீரென பாய்ந்தார்.

அதாவது, கடந்த 14ம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து,‘நாசர் நிச்சயமாக ஊழலுக்கு ஜெயிலுக்கு போவது உறுதி. அதில் மாற்று கருத்து இல்லை’ எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு அமைச்சர்களாக நோண்டி நொங்கெடுக்க தொடங்கியபடியால், பொறுமை இழந்த அமைச்சர்கள் அண்ணாமலையை சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினர்.

அதே சமயம், ‘அண்ணாமலை காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவரை ஒரு பொருட்டாகவே கருத வேண்டாம்’ என அமைச்சர்களுக்கு திமுக தலைமையில் இருந்து உத்தரவு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் மட்டும் இல்லாமல் திமுகவினரும் கூட ரியாக்‌ஷன் எதுவும் காட்டாமல் அண்ணாமலை விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசி இருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த கூட்டத்தில், ‘நாம் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். மகாராஷ்டிராவில், சிவசேனாவுக்கு நடந்தது தான் இங்கே திமுகவுக்கும் நடக்கும்’ என அண்ணாமலை பேசியுள்ளார். இந்த பேச்சு தான் தற்போது அண்ணாமலைக்கு சிக்கலை தந்துள்ளது.

இனி வரும் தேர்தலில் கடுமையாக உழைத்து ஆட்சியை பிடிக்க ஆலோசனை வழங்குவார் என ஆவலுடன் எதிர்பார்த்த தொண்டர்களிடம் குறுக்கு வழியில் அதுவும் மகாராஷ்டிரா பார்முலாவை உதாரணம் காட்டி சொல்லி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம், ‘நாம் ஆட்சிக்கு வருவோம். சிவசேனாவுக்கு நடந்தது தான் திமுகவுக்கு நடக்கும்’ என்று, கூறியிருக்கும் அண்ணாமலை பேச்சை வைத்து பார்க்கையில் திமுக எம்எல்ஏக்களை விலை பேசும் நடவடிக்கையில் அண்ணாமலை ஈடுபடுகிறாரோ? என்கிற சந்தேகம் எழுவதாக அரசியல் நோக்கர்கள் கொளுத்தி போடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.