ஷார்ட் கோவிடாக மாறிய கொரோனா தொற்று… இனி பயமே தேவையில்லையா?

கோவிட்-19 தொற்று பல விதங்களில் உருமாறி, பல்வேறு அலைகளாகப் பரவி வரும் நிலையில் தற்போது தென்கொரியா நாட்டில் தொற்று பரவும் வேகம், சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் 17 -ம் தேதி நிலவரப்படி 1,78,480 நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நம் நாட்டில் ஒமிக்ரான் வகையின் பல்வேறு திரிபுகள் பரவி வருகின்றன.

கோவிட்-19

இதற்கு முந்தைய‌ அலைகளில் ஏற்பட்ட கோவிட் தொற்று பல வாரங்கள் நீடித்தது. ஆனால் தற்போது ஏற்படும் தொற்று ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளது. இதன் அறிகுறிகளும் மிகவும் மிதமான அளவிலேயே இருக்கிறன. ஆனால் இந்தத் தொற்று‌ ஒருமுறை ஏற்பட்டபின் அது திரும்பவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கான காரணம் பற்றி கொல்கத்தாவில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (IPGMER) சேர்ந்த பேராசிரியர் திப்தேந்திர சர்கார் கூறுகையில்,”கொரோனா வைரஸ் பல்வேறு விதமான திரிபுகளாக உருமாறிய பின் அதன் வீரியத்தை இழந்துள்ளது. அதனால் அறிகுறிகளும் மிதமாகவே தோன்றுகின்றன.

கோவிட்-19

வீரியம் குறைவாக இருக்கும் தொற்றால் நோய் பாதிப்பு ஏற்படும்போது நம் உடலும் நோய்க்கு எதிராக வீரியம் குறைவான ஆன்டிபாடிக்களையே (Antibodies) உற்பத்தி செய்யும். அதனால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிக நாள்களுக்கு இருக்காது. நோய்த்தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அறிகுறி இல்லாமலும் சிலரின் உடலுக்குள் வைரஸ் இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது” என்கிறார்.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவர் பூங்குழலியிடம் கேட்டபோது, “ஒருமுறை கோவிட் தொற்று வந்து, பெரிய இடைவெளி இல்லாமல் மீண்டும் தொற்று பாதிப்பதை ‘ஷார்ட் கோவிட்’ என்கிறார்கள். கோவிட் பரவல் தொடங்கிய சமயத்தில் சமூகத்தில் அனைவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுவிட்டால் பின் யாருக்கும் தொற்று வராது, அனைவருக்கும் எதிர்ப்பாற்றல் வந்து விடும் என்றெல்லாம் சில கருத்துகள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இது முற்றிலும் தவறானது என தொடக்கம் முதலே உலக சுகாதார நிறுவனம் கூறி வந்தது.

பூங்குழலி

இதுவரை கோவிட் தொற்று ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமிக்ரான் என பல விதங்களில் உருமாறி விட்டது. தற்போது ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த BA1,BA2,BA3,BA4 போன்ற சில திரிபுகள் பரவி வருகின்றன. டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அது ஒரு தடவை ஏற்பட்ட பின் இன்னொரு முறை ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று குறைவாக இருந்தது. அது வலுவான எதிர்ப்புசக்தியை உடலுக்கு வழங்கியது‌.

ஆனால் ஒமிக்ரான் திரிபுகள் BA1 முதல் BA4 எனப் பல வகைகளில் உள்ளன. BA1 தொற்று ஏற்பட்டவர்களுக்கு BA4 வகைக்கு எதிரான எதிர்ப்புசக்தி இருக்காது. ஆனால் இந்தத் திரிபுகள் வேகமாகப் பரவி வேகமாகக் குறைந்தும் விடுகின்றன.

cold and fever

இதர நோய்கள் இருப்பவர்கள், இதயநோய், சுவாசப் பிரச்னை போன்ற பாதிப்புகள் இருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் பெரிய பாதிப்பைத் தருவதில்லை. சாதாரண சளி, காய்ச்சல் போல் சரி ஆகி விடுகிறது.

ஆனால் இவை அடுத்த வகை வைரஸுக்கு எதிராக பலமான எதிர்ப்பு சக்தியைத் தருவதில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. கோவிட் முன்பு போல் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் குறைந்திருப்பதற்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று உருமாறிய திரிபுகள். மற்றொரு காரணம் தடுப்பூசி முதலான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள். ஆனால் கோவிட் தொற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை என முழுவதுமாகக் கூறிவிட முடியாது.

COVID-19 vaccine

இணைநோய் உடையவர்கள் போன்ற சிலருக்கு அதன் பாதிப்பு தீவிரமாக வாய்ப்பு உண்டு. ஃபைஸர் போன்ற தடுப்பூசி நிறுவனங்கள் ஒவ்வொரு திரிபுக்கும் ஏற்ற வகையில் தடுப்பூசிகளைத் தயாரிக்க உள்ளதாகக் கூறி உள்ளன. எனவே, தேவை உள்ளவர்கள்‌ அதாவது நோய்தொற்று தீவிரமாக ஏற்பட வாய்ப்பு இருப்பவர்கள் இத்தகைய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.