உறக்கம் இழந்த ஓபிஎஸ்; வந்து..வந்து..போகும் ஒட்டகம்!

தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர்

மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே பனிப்போர் தொடங்கியது.

அதிமுகவில் எனக்கு தான் அதிக செல்வாக்கு என இருவருமே மார்தட்டியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கலகமாக மாறியது. இதை எதிர்பார்க்காத எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை முழுமையாக கைப்பற்ற வியூகம் வகுத்தார்.

இதையடுத்து பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கையில் போட்டுக்கொண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கடந்த மாதத்தில் நடத்தினார்.

இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்க செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.

இதனால் உக்கிரம் அடைந்த ஓபிஎஸ் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார். இந்த வழக்கு விசாரணையில் ஆரம்பகட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் பின்னர் தலைகீழாக மாறியது.

ஒருவழியாக வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது. மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியும்.

அவைத் தலைவர் அழைப்பு விடுக்க முடியாது. கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஜூன் 23ம் தேதிக்கு முன் கட்சியில் என்ன நிலை இருந்ததோ அதே நிலைதான் தற்போது நீடிக்க வேண்டும் என நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருடைய கலங்கிப்போய் கிடக்கின்றனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பமாக சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும், அப்போது தான் அதிமுகவை வெற்றி பாதையில் அழைத்து செல்ல முடியும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

அதே சமயம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஓபிஎஸ் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த சூழலில் தான் அவசரப்பட்டு உளறிட்ட குமாரு என்பதை போன்று சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து இருப்பது கொள்ளிக்கட்டையால் தலையில் தானே சொரிந்து கொள்வது போன்றது என்று நெட்டிசன் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த நெட்டிசன் கூறி இருப்பதாவது: கூடாரம் ஒன்றில் ஒருவன் தங்கி இருந்தான். அதன் வெளியில் ஒட்டகம் ஒன்று படுத்திருந்தது. இரவு நேரம் என்பதால், குளிர் தாங்காமல் ஒட்டகம் கொஞ்சம் மூக்கை கூடாரத்துக்குள் நுழைத்தது. மூக்கை தானே உள்ளே நுழைக்கிறது என அவனும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான்.

இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முழுவதுமாக கூடாரத்திற்குள் நுழைத்து வசதியாக படுத்துக்கொண்டது. அதில் இருந்தவன் இடம் போதாமலும், ஒட்டகத்தை வெளியில் அனுப்ப முடியாமலும் தூக்கம் இழந்தான். இந்த கதையை ஓபிஎஸ் கொஞ்சம் நினைவில் கொண்டு செயல்பட்டால், நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன் கூறி இருக்கும் இந்த ஒட்டகம் கதையை ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சிடம் எடுத்து சொன்னதாகவும், அதை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கதிகலங்கிப் போய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ஒட்டகம் கதை இரவு, பகல் என இல்லாமல் நினைவுக்கு வந்து போவதால் என்ன முடிவு எடுப்பது? என்று புரியாமல் ஓ.பன்னீர்செல்வம் தூக்கம் இழந்து தவிப்பதாகவும் ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.