சிங்கார சென்னையின் 383வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டின

Chennai Day Celebrations: ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 20ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. 1639-ம் ஆண்டு உருவான சென்னைப் பட்டினம், 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இரு நாட்கள் கொண்டாடப்படும் சென்னையின் பிறந்த நாள் விழாவில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை நடத்தவும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகளை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனை கடைகளும் அமைக்கப்பட உள்ளன.

சென்னை டே கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் ‘செல்ஃபி பூத்கள்’ அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை தின நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

சென்னை தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆகஸ்ட் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநாகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று மாலை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் திருமதி பிரிய ராஜன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்,  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு. கபில்குமார் சி சரத்கர்,  இந்திய தொழிற் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர் திரு. சத்யகம் ஆர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறும் சென்னை தின கலாச்சார நிகழ்ச்சிகளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

சென்னை நாள் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகளை நடும்பணிகளும் நடைபெற உள்ளன. மேலும்,பிரத்யேகமாக பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.