நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி… ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம்

பெல்பாஸ்ட்,

வடக்கு அயர்லாந்து பகுதியில் வசித்து வரும் பெண் ஜேனிஸ் வால்ஷ். இவர் டோமினோ பீட்சா விற்பனை செய்யும் நிறுவனம் நடத்திய பணி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பீட்சா வினியோகம் செய்யும் வாகன ஓட்டுனருக்கான அந்த நேர்காணலில் வால்ஷிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் இடையே அவரது வயது பற்றிய கேள்வி ஒன்றும் இடம் பெற்றிருந்தது.

அதற்கு அவர் பதிலளித்து விட்டு சென்றுள்ளார். இதன்பின், அந்த பணிக்கு அவர் தேர்வாகவில்லை. அவர் நிராகரிக்கப்பட்ட பின்னர், நேர்காணலை மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார். அதில், தொடக்கத்திலேயே தனது வயது மற்றும் பாலினம் ஆகியவை சார்ந்த கேள்விகளை கேட்டு அதனால், தான் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என உணர்ந்து உள்ளார்.

உடனடியாக வால்ஷ், அந்த நிறுவனத்திற்கு பேஸ்புக் வழியே தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வயது அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளேன் என உணர்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதன்பின்னர், அவரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட அந்நிறுவனத்தின் நேர்காணல் குழுவினர்களில் ஒருவர் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். பணி நேர்காணலின்போது, ஒருவரது வயது பற்றிய விவரங்களை கேட்பது முறையற்றது என தங்களுக்கு தெரியவில்லை என தெரிவித்து உள்ளனர்.

இதன்பின், அந்நிறுவனத்தின் மற்றொரு பணியாளருடனான உரையாடலில், 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளம் பணியாளர்களே, அந்த பணிக்கு தகுதியானவர்கள் என வால்ஷ் தெரிந்து கொண்டார்.

பெண் என்ற வேற்றுமையாலும் ஓட்டுனர் பணிக்கு தேர்வாகாமல் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என வால்ஷ் உணர்ந்திருக்கிறார். நேர்காணலுக்கு பின்பும், டோமினோ பீட்சா விற்பனை செய்யும் அந்த நிறுவனம், ஓட்டுனர்களுக்கான பணி சார்ந்த விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.

வால்ஷுக்கு ஆதரவாக வடக்கு அயர்லாந்தின் சமத்துவ ஆணையமும் ஆதரவு தெரிவித்தது. இந்த சட்ட போராட்டத்தில், ஸ்டிராபேன் பகுதியில் டோமினோ பீட்சா விற்பனை செய்யும் உரிமை பெற்ற நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான ஜஸ்டின் குயிர்க், வால்ஷுக்கு ரூ.3 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க முன் வந்துள்ளதுடன், நடந்த சம்பவத்திற்காக அவரிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.