“பசுவதைக்கு எதிராக 5 பேரை அடித்துக் கொன்றுள்ளோம்" – அதிர்ச்சி அளித்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு

நாட்டில் பசுவதைக்கு எதிரான பிரசாரத்தில் பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. பசுவதையில் ஈடுபட்ட சிலர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் பாஜக தலைவர்களில் ஒருவரான ஞான்தேவ் அஹுஜா, `பசு வதையில் ஈடுபடுபவர்களை கொலை செய்யுங்கள்’ என்று நேரடியாக தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அஹுஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “பசு வதையில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். அது போன்ற செயலில் ஈடுபட்ட 5 பேரை நாங்கள் இதுவரை கொலை செய்திருக்கிறோம். இதற்கான தொழிலாளர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். இது போன்று கொலை செய்பவர்களை ஜாமீனில் எடுப்போம். அல்லது வழக்கில் இருந்து விடுவிப்போம்” என்று தெரிவித்தார். ராஜஸ்தானில் 2017, 18ம் ஆண்டுகளில் அஹுஜா எம்.எல்.ஏ.வாக இருந்த பகுதியில் உள்ள ராம்கர் என்ற இடத்தில் ரக்பர் கான் மற்றும் பெக்லுகான் ஆகிய இரண்டு பேர் பசுவதையில் ஈடுபட்டதாக கொலை செய்யப்பட்டனர்.

இதில் பெக்லுகான் கொலையில் தொடர்புடைய 6 பேரையும் கோர்ட் விடுவித்துவிட்டது. இதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மற்றொரு கொலை வழக்கு விசாரணையில் இருக்கிறது. அஹுஜா தெரிவித்த மற்ற மூன்று கொலைகள் எது என்று தெரியவில்லை. ஆனால் அஹுஜா தெரிவித்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இதனால் மாநில அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.

இது குறித்து பாஜக நிர்வாகி சஞ்சய் சிங் கூறுகையில், “இது அஹுஜாவின் தனிப்பட்ட கருத்து. பாஜக அது போன்று நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அஹுஜா தனது கருத்தை நியாயப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், “பசுக்களை கடத்தினாலோ அல்லது இறைச்சிக்காக வெட்டினாலோ அவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

பெக்லுகான், ரக்பர்கான் ஆகியோர் கடந்த 2017, 18ம் ஆண்டு ராஜஸ்தானின் பெஹ்ரூர் மற்றும் லாலாவாண்டி ஆகிய கிராமங்களில் பசு மாடுகளை வாகனத்தில் கொண்டு சென்ற போது அடித்து கொலை செய்யப்பட்டனர். அண்டை மாநிலமான ஹரியானாவை சேர்ந்த இருவரும் பால் பண்ட வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.