சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு! தமிழக முதலமைச்சர் வெளியிட்டார்…

சென்னை: பொதுமக்களக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை முதல்வர் இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

 நல்ல சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 2.61 இலட்சம் கி.மீ ஆகும். இவற்றில், நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் சுமார் 70,556 கி.மீ நீளச் சாலைகள் உள்ளன. இச்சாலைகள் இந்திய தேசிய ஆணைய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மற்றும் மாவட்ட இதர சாலைகள் என பல்வேறு பிரிவுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளால் பராமரிக்கப்படும் சாலைகளும் உள்ளன. சாலைக் கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சாலைக் குறியீடுகள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆகையால், சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பொதுமக்கள் சாலைகளை சரியான வகையில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கையேட்டில் வாகன வேகத்தின் தாக்கங்கள் குறித்த விபரங்கள், உலக சுகாதார நிறுவனம், இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சாலை விபத்து தொடர்பான புள்ளி விவரங்கள், விபத்திற்கான காரணங்கள், தவிர்த்திடும் வழிமுறைகள், சாலை விதிகள், சாலைப் பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் தெரிவிக்கும் பலகைகள் ஆகிய விவரங்கள், இலகுரக, கனரக வாகனம் இயக்குபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றிய படவிளக்கம், வாகனப் பராமரிப்பு, முதலுதவி சேவைப் பற்றிய விளக்கங்கள் மற்றும் உதவி எண்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பூ.இரா.குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரெ.கோதண்டராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.