ரூ.1000 கோடி….? சென்னையில் இந்தாண்டும் மழைநீர் தேங்குமாம்…! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க திமுக அரசு ரூ.1000 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாததால் இந்த பருவ மழைக்கும் சென்னையில்  மழை நீர் தேங்கதான் செய்யும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பருவமழை காலங்களின்போது, சென்னையில் மழைநீர் தேங்குவதும், அதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதும் வழக்கமாக உள்ளது. இதை தடுக்க திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுபோல, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த பருவமழை காலத்தின் மழைநீர் தேங்கும் பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து, விரைவில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு,தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து,   இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இந்த பணிகளை அவ்வப்போது முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் இந்த ஆண்டும் மழைநீர் தேங்கும் என தெரிவித்து உள்ளார்.  சென்னை தினத்தையொட்டி மாநகராட்சி பள்ளிகளில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் பரிசு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கால்வாய் அமைக்கும் போதும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அதிகமாக இருப்பதால் அதை சரி செய்ய சற்று தாமதம் ஏற்படுகிறது. மேலும், சென்னை நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் 40 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 50 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 70 சதவீத பணிகளும் நடைபெற்று உள்ளது.

பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தினால் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியவர், இதனால், ஏற்படும் சிரமங்களை சிலகாலம் பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் இந்த ஆண்டு மழைநீர் தேங்குவதை தடுக்க முடியாது என்றவர்,  ஆற்றங்கரைப் பகுதியில் அடுத்த ஆண்டுதான் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் . ஆகவே இந்த பருவ மழைக்கு சென்னையில் சில பகுதிகளில் மழை நீர் தேங்கும். ஆனால் கடந்த காலங்கள் போல் அதிக அளவில் மழை பெய்தால் மழை நீர் தேங்குவதற்கான வாய்ப்பு இல்லை.

இவ்வாறு  கூறினார்.

வடசென்னை பகுதிகளில் இன்றுகாலை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின்…

அமைச்சர் நேருவின் இந்த தகவல், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் பணம் ரூ.1000 கோடி அம்பேல்தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், இப்போது நடைபெற்று வரும் பணிகள் பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடிவடையவில்லை என்றால், நடைபெற்று வரும் பணிகள் மீண்டும் மழைவெள்ளத்தால் சேதமடைய வாய்ப்பு உண்டு. இதனால், அதற்காக ஒதுக்கப்படும் செலவினங்களும் அதிகரிக்கும். இது அரசுக்கு மேலும் இழப்பையே ஏற்படுத்தும்…

மழைநீர் வடிகால் பணிகள்: அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.