அமைச்சர் உறுதி அளித்ததால் மவுனப் போராட்டத்தை நிறுத்திக்கொண்ட பாஜக விவசாய அணி

கோவை: மவுனப் போராட்டம் நடத்திய பாஜக விவசாய அணி போராட்டக்காரர்களை தமிழக அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சந்தித்து அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக விவசாய அணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக விவசாய அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ.1856.88 கோடி செலவில் 96.5% முடிக்கப்பட்ட அவினாசி – அத்திக்கடவு திட்டம் வெறும் 2.2 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்காமல் 17 மாதங்களாக தடைப்பட்டு நிற்பதையும்,ஈரோடு வருகைபுரியும் தமிழக முதல்வர் திட்டம் நிறைவேற்றப்பட்ட கிரே நகர் பம்ப் ஹவுஸ் பகுதியை மட்டும் பார்வையிடுவதைக் கண்டித்தும், திட்டம் நிறைவேற்றப்படாத நசியனூர் வாய்க்கால்மேடு பகுதியை பார்வையிட வேண்டுமென்று கருப்பு முகக்கவசம் அணிந்து அறவழிப்போராட்டத்தை இன்று (25.08.2022) காலை 10 மணிக்கு தொடங்கியது பாஜக விவசாய அணி.

அப்போது அங்கு வருகைபுரிந்த வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி, பாதுகாப்பு குறைபாடு காரணமாக இரவு நேரம் வருகைபுரியும் முதல்வர் இப்பகுதியை பார்வையிட முடியாது என்பதையும், அமைச்சர் என்ற முறையில் தானே முன்நின்று இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக அங்கு கூடியிருந்த விவசாயப் பெருமக்களிடமும், பாஜக நிர்வாகிகளிடமும் உறுதியளித்தார்.

இதையடுத்து போராட்டக் களத்திலிருந்த விவசாயிகளிடமும், நிர்வாகிகளிடமும் கலந்தாலோசித்த பின், அமைச்சரின் வருகைக்கும், அவர் அளித்த உறுதிமொழிக்கும் மதிப்பளிக்கும் வகையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ்.

இந்நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார், தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார்,விவசாய அணி மாநில துணைத்தலைவர் தங்கராஜ், மாநில செயலாளர் லோகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.