அசாமில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் பாமாயில் மரங்கள்: ஒன்றிய அரசு இலக்கு

கவுகாத்தி: அசாம் மாநில வேளாண் துறை தகவலின்படி, மாநிலத்தில் 6 பாமாயில் ஆலைகள் அமைப்பற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 3 தொழிற்சாலைகளை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் 2025-2026ம் ஆண்டுக்குள் 2 லட்சம் ஹெக்டேர் (5 லட்சம் ஏக்கர்)  பரப்பளவில் பாமாயில் மரங்கள் வளர்ப்பதற்கு ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாமாயில் மரங்களை வளர்ப்பதற்காக 18 மாவட்டங்களில் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை தேர்வு செய்யும் பணியில் பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் மாவட்ட வேளாண் அலுவலகங்கள் ஈடுபடும்’ என்றார்.

பொதுவாக விவசாயிகள் பயிர் செய்வதற்கு நிலத்தடி நீரை சார்ந்து இருப்பார்கள். ஆனால் அசாமில் கோல்பாரா மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட எண்ணெய் மரம் வளர்ப்பானது மழைநீரினால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது தெரியவந்துள்ளது. எண்ணெய் பனையை வளர்ப்பதற்காக 6.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் விவசாய கழிவுகள் அல்லது தரிசு நிலங்கள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்றிய அரசின் இந்த திட்டத்தின் மூலமாக பாமாயில் தேவைக்காக இதர நாடுகளை நம்பி இருக்கும் நிலை குறையும். பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய் பனையானது பனை மர குடும்பத்தை சேர்ந்த ஒரு வகையாகும். இது மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.