உ.பி.யில் மது, இறைச்சி பழக்கத்துக்கு அடிமையாகி 250 பெண்களை கடித்த குரங்குக்கு நிரந்தர சிறை

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் மது மற்றும் இறைச்சிப் பழக்கத்துக்கு அடிமையாகி சுமார் 250 பெண்கள் வரை கடித்த குரங்கு ஒன்று கான்பூர் உயிரியல் பூங்காவில் நிரந்தரமாக சிறை வைக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் மிர்சாபூரில் மாந்திரீகம் செய்துவந்த துறவி ஒருவர் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த குரங்குக்கு மது மற்றும் மாமிசப் பழக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் 2018-ல் அவர் இறந்து விட்டார்.

அத்துறவியிடம் மாந்திரீகம் செய்ய பெரும்பாலும் பெண்கள் வருவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் அவர் இறந்த பிறகு அவர் வளர்த்த குரங்குக்கு மது மற்றும் இறைச்சி கிடைக்கவில்லை. இதனால் அந்தக் குரங்கு பெண்களை கண்டால் அவர்களை தாக்கவும் கடிக்கவும் செய்தது.

இது தொடர்பாக சுமார் 250 பெண்கள் மற்றும் சிறுமிகள் காவல் நிலையங்களில் புகார் அளித்ததை தொடர்ந்து உ.பி.யின் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினர் கடந்த 2018 நவம்பரில் அந்தக் குரங்குக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அதை கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைத்தனர். ஒரு வருடத்துக்குப் பிறகு அந்தக் குரங்கு திருந்தியதாக கருதிய அதிகாரிகள் அதனை அருகில் உள்ள வனத்தில் விட்டனர். ஆனால் பெண்களை அந்தக் குரங்கு தாக்குவது தொடர்ந்ததால் அதை தேடிப்பிடித்து மீண்டும் கான்பூர் உயிரியல் பூங்கா கூண்டில் நிரந்தரமாக சிறை வைத்துள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கான்பூரின் வன அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் துணை இயக்குநரான தமிழ்நாட்டை சேர்ந்த எம்.செம்மாறன் கூறும்போது, “இந்தக் குரங்கின் தாக்குதலில் ஒரு சிறுமியும் அப்போது இறந்துவிட்டார். இக்குரங்கால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக மிர்சாபூரில் ஒரு தனி வார்டும் செயல்பட்டது. வேறுவழியின்றி அதை நிரந்தரமாக கூண்டில் அடைத்து விட்டோம்” என்றார்.

கோயில்களும், மடங்களும் நிறைந்துள்ள உ.பி.யில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளது. குரங்குகளுக்கு கருத்தடை, காப்பகம் என மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தொடர்கிறது. அதேசமயம் குரங்குகளை செல்லப் பிராணியாக வளர்க்கும் பழக்கமும் உ.பி.வாசிகளிடம் உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இது தவறு எனும் விழிப்புணர்வால் தற்போது இந்த வழக்கம் குறைந்து வருகிறது.

உ.பி.யின் லக்னோவில் குழந்தை இல்லாத பணக்கார தம்பதியர் குரங்கு ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தனர். அதற்கு சும்மன் எனப் பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர். சுமார் 10 வருடங்களுக்கு பிறகு கடந்த 2015-ல் சும்மன் இறந்து போனது. இதனால் மனம் வெறுத்த அத்தம்பதியர் தங்கள் சொத்தில் ஒரு பங்கை குரங்கின் பெயரில் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு எழுதிவைத்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.