நாடு முழுவதும் குண்டுவெடிப்பு: பரபரப்பு குற்றச்சாட்டு – பதில் சொல்லுமா ஆர்.எஸ்.எஸ்., பாஜக?

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து நான்டெட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சங்பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும், நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியதாகவும், அது “2014 மக்களவை தேர்தலில் அவர்களுக்கு உதவியது” என்றும், ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி யஷ்வந்த் ஷிண்டே என்பவர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவற்றில் பணியாற்றியதாகக் கூறிக் கொள்ளும் யஷ்வந்த் ஷிண்டே என்பவர், வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுதப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும், பின்னர் குண்டுவெடிப்புக்காக கைது செய்யப்பட்டவர்களைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

“நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும், அதில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும், ஆர்எஸ்எஸ் தேச விரோத நடவடிக்கைகள் குறித்த பயங்கரமான விவரங்களையும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் யஷ்வந்த் ஷிண்டே பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதைவிட முக்கியமான செய்தி வேறென்ன இருக்க முடியும்?” என்று பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய சிங், துணிச்சலாக செயல்பட்டுள்ள யஷ்வந்த் ஷிண்டேவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரியுள்ளார். “பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததில் யஷ்வந்த் ஷிண்டே துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். யஷ்வந்த் ஷிண்டேவின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள். அவர்களால் ஷிண்டேவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம். எனவே, அவருடைய பாதுகாப்புக்கு மும்பை போலீஸ் கமிஷனர் ஏற்பாடு செய்ய வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் தனது 18ஆவது வயதில் இருந்து ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பில் இருந்ததாக அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது. 1994 ஆம் ஆண்டு ஜம்மு மாநிலத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதைப் படித்துவிட்டு அங்கு சென்றதாகவும், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் அவரை ராஜௌரி மற்றும் ஜவஹர்நகர் பகுதியின் விஸ்தராக் ஆக நியமித்தார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை தாக்கியதற்காக 1995ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்ததாகவும், அந்த வழக்கில் இருந்து 1998ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதாகவும் அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிண்டே ஆர்எஸ்எஸ்ஸில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப் பயிற்சி பெற்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பிரச்சாரக் ஆக நியமிக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டி மும்பை திரும்பிய அவர் பஜ்ரங் தளத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவர் பிரிவான ஏபிவிபியின் கர்ஜனாவுக்காகவும் பணியாற்றினார்.

போர்க்குணம் கொண்ட சிறுவர்களை தேர்வு செய்து ஜம்முவுக்கு அழைத்துச் செல்லும்படியும், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்த அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்படியும் இந்திரேஷ் குமார் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் தானேயில் நடைபெற்ற மாநில அளவிலான விஎச்பி கூட்டத்தில் சிறுவர்கள் தேர்வு நடைபெற்றதாகவும், அங்கு விண்ணப்பதாரர்களிடம் ஹிமான்ஷு பான்சே என்ற விஎச்பி தலைவரை அறிமுகப்படுத்தியதாகவும், அதன்பின்னர், ஹிமான்ஷு பான்சே உள்ளிட்ட ஏழு பேரை யஷ்வந்த் ஷிண்டே ஜம்முவிற்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி முகாமைப் பற்றி, “அந்த இரண்டு நபர்களும் (விஎச்பி தலைவர் மிலியாண்ட் பரண்டேவின் நெருங்கிய கூட்டாளிகள்) வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி முகாமிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப் போவதாகவும், அதன்பிறகு, நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்த ஒரு திட்டம் இருப்பதாக கூறினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச குண்டுவெடிப்புகளை நடத்த நான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதனைகேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அதை முகத்தில் காட்டாமல், இது 2004 மக்களவை தேர்தலுக்கான திட்டமா என்று அவர்களிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை.” என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரேஷ் குமார், ஹிமான்ஷு பான்சே, மிலிந்த் பரண்டே, ராகேஷ் தவாடே, ரவி தேவ் (மிதுன் சக்ரவர்த்தி) ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய சதிகாரர்கள் என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராகேஷ் தவாடே என்பவர் வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி அளிப்பதற்காக மிதுன் சக்ரவர்த்தி என்ற நபரை அழைத்து வந்தார் என்றும், மிதுன் சக்ரவர்த்தியின் உண்மையான பெயர் ரவி தேவ் என்று பின்னர் கண்டுபிடித்தததாகவும் அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ராகேஷ் தவாடே கைது செய்யப்பட்டதாக அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது. “பயிற்சிக்குப் பிறகு, வெடிகுண்டுகளை பரிசோதிப்பதற்காக ஒரு தனிமையான காட்டுப் பகுதிக்கு பயிற்சியாளர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்ற அமைப்பாளர்கள் குண்டுவெடிப்பு ஒத்திகையை மேற்கொண்டனர். ஒரு சிறிய குழி தோண்டி, அதில் வெடிகுண்டை குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்யும் கருவியை இணைத்து வைத்து, அதை மண் மற்றும் பெரிய பாறைகளால் மூடி வெடிகுண்டை வெடிக்கச் செய்ய பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போது நடத்திய சோதனை வெற்றிகரமாக நடந்தது.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், வங்காளத்தைச் சேர்ந்த தபன் கோஷ் மற்றும் கர்நாடகாவில் உள்ள ராம் சேனைச் சேர்ந்த பிரமோத் முத்தாலிக் உட்பட பலரின் செயல்பாடுகள் இருப்பதாக யஷ்வந்த் ஷிண்டே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாஜகவுக்கு அரசியல் பலன் கிடைக்கவில்லை. அதன் விளைவாக, 2004 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு, மிலிந்த் பரண்டே போன்ற முக்கிய நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவாக இருந்துக் கொண்டு, அவர்கள் நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர். ஒருதலைப்பட்ச ஊடகங்கள், காவல்துறையின் உதவியுடன் அவர்கள் இஸ்லாமியர்கள் மீது குற்றம் சாட்டியதாகவும், அது 2014 மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு உதவியது.” என்றும் பிரமாணப் பத்திரத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து மதம் மிகவும் உன்னதமான மதம் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, இந்து மதம் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொடூரமான குற்றங்களில் ஈடுபட தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ள யஷ்வந்த் ஷிண்டே. ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற சில இந்து அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன. அந்த அமைப்பில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் குண்டுவெடிப்புகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.