ராகுல் நடைபயணத்தால் நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும் – காங். செய்தி தொடர்பாளர் ஷாமா

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடைபயணம், நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் வரையிலான 3,500 கி.மீ. தூர நடைபயணத்தை கன்னியாகுமரியில் வரும் 7-ம் தேதி தொடங்குகிறார். அன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் நடைபயணத்தில் பங்கேற்று ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்குகிறார்.

ஒவ்வொரு நாளும் 25 கி.மீ.தூரம் நடைபயணம் மேற்கொள்ளவும், 150 நாட்களில் பயணத்தை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 7 மணி வரையும் நடைபயணம் நடைபெறும். இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதி மக்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடுவார். நடைபயணத்தின்போது ராகுல் காந்தி பாதுகாப்பாக தங்குவதற்கு சிறப்பு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைபயணத்தில் கடைசி வரை 100 பேர் பங்கேற்கின்றனர். மேலும் பிற மாநிலத்தினர் 100 பேர், அந்தந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் 100 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரம் தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர். கடைசிவரை பங்கேற்போருக்கு உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில், மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மக்களிடையே மதம், சாதி, மொழி, உணவு போன்றவற்றால் பிளவுபடுத்தும் செயல் போன்றவை தொடர்பாக பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படும்.

இது அரசியல் நடைபயணம் இல்லை. அமைதி நடைபயணம். மனதின் குரலுக்காக அன்றி, மக்களின் குரலுக்காக நடத்தப்படுகிறது. நாட்டில் இந்த நடைபயணம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியின் துணைத் தலைவர் செந்தமிழன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு, செயலாளர் கடல் தமிழ்வாணன், ஊடகத் துறை தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.