ஆப்கனை சேர்ந்த 2 பேர் கைது ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. டெல்லியில் போதைப்பொருள் குற்றங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 பேர் அதிக மதிப்புள்ள போதைப் பொருளை கடத்துவதாக இவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று தீவிர சோதனையில் இறங்கினர். அப்போது, மிதாபூர் சாலை, கலிண்டி கஞ்ச் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரனாக அவர்கள் பதிலளித்ததால் போலீஸ் நிலையம் கொண்டு சோதனையிட்டனர்.

அப்போது அவர்களிடம் 312 கிலோ மெத்தாபெட்டாமைன் எனும் விலை உயர்ந்த போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1,200 கோடியாகும். இதன் ஒரு கிராமே ரூ.30,000 வரை விலை போகும். பிடிபட்ட இருவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்தபா ஸ்டானிக்சா (23), ரஹிமுல்லா ரஹிம் (44) ஆகியோர் ஆவர். ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்த போதைப் பொருளை இவர்கள் இந்தியாவுக்கு கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வளவு விலை அதிகமான போதைப் பொருள், சோதனையில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.